Breaking News

இலங்கை விவகாரங்களுக்காக சிறப்பு பிரதிநிதியை நியமிக்க மோடி முடிவு !

இலங்கை விவகாரங்களைக் கவனிப்பதற்கென தனது நேரடி
கண்காணிப்பின் கீழ் சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிக்க இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தமது ஆட்சிக் காலத்தில் இலங்கை விவகாரங்களுக்காக மட்டும் ஜி. பார்த்தசாரதியை சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருந்தார். அதேபோல் இலங்கை விவகாரங்களை தமது சார்பில் நேரடியாக கையாளக் கூடிய சிறப்பு பிரதிநிதியை நியமிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. 

அப்படி நியமிக்கப்படும் சிறப்பு பிரதிநிதியானவர் வெளிவிவகார அமைச்சர், அவ்வமைச்சின் செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கும் மேலான அதிகாரங்களைக் கொண்டு செயற்படக்கூடியவராக இருப்பார் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய பிரதமரின் பதவியேற்பு நிகழ்வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அழைத்தமைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எவ்வாறாயினும், இந்த பிரதிநிதியை நியமிப்பதால் இலங்கை மீதான இந்தியாவின் நெருக்கடி அதிகரிக்கும் என இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.