Breaking News

புதிய பிரதம நீதியரசராக ஸ்ரீபவன் நியமிக்க தீர்மானம்

இலங்கையின் 44வது பிரதம நீதியரசராக கனகசபாபதி ஸ்ரீபவன் நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
 
தற்போது நடைபெற்று வரும் அமைச்சரவை மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 43வது பிரதம நீதியரசராக தெரிவு செய்யப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்க மீது, கடந்த 2013ம் ஆண்டு குற்றப் பிரேரணை தாக்கல் செய்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அப்போதைய அரசாங்கம், தெரிவிக்குழு விசாரணையை அடுத்து அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்கியது.

இதனையடுத்து பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் பொறுப்பேற்றார். பின்னர் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் மீளவும் கடமைகளைப் பொறுப்பேற்குமாறு ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு அழைப்பு விடுத்தது.

இதன்படி பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்தமை மற்றும் மொஹான் பீரிஸை பிரதம நீதியரசராக நியமித்தமை போன்ற இரண்டு நடவடிக்கைகளும் கடந்த அரசாங்கத்தால் அரசியல் அமைப்புக்கு உட்பட்டு செய்யப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நேற்றையதினம் ஷிரானி பண்டாரநாயக்க மீண்டும் பிரதம நீதியரசராக கடமைகளைப் பொறுப்பேற்றதோடு, இன்று அப்பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். இந்தநிலையில் நாட்டின் புதிய பிரதம நீதியரசராக கே. சிறிபவனை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

1952ம் ஆண்டு பெப்ரவரி 29ம் திகதி பிறந்த கே.ஶ்ரீபவனுக்கு தற்போது 62 வயதாகின்றது.யாழ். இந்துக் கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியை முடித்த அவர், இலங்கை சட்டக் கல்லூரி மற்றும் லண்டன் பல்கலைக்கழகத்திலும் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

பின்னர் 27.03.2008ம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதியரசராக அவர் பொறுப்பேற்றார். இதேவேளை மைத்திரிபால சிறிசேன இலங்கை ஜனாதிபதியாக ஶ்ரீபவன் முன்னிலையிலேயே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.