Breaking News

உதயசிறி விடுதலை (காணொளி இணைப்பு)

சீகிரியாவில் எழுதியமைக்காக சிறையில் அடைக்கப்பட்ட மட்டக்களப்பு யுவதி சின்னத்தம்பி உதயசிறி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அனுராதபுரம் சிறையில் இருந்த இவருக்கு அண்மையில் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. 

27 வயதான இவர், கடந்த பெப்ரவரி மாதம் 14ம் திகதி தொல்பொருள் ஆய்வுக்குரிய சிகிரியா மலைக் குன்றுக்கு சுற்றுலா சென்றிருந்த வேளை, சுவரோவியங்களில் சில எழுத்துக்களை எழுதி சேதப்படுத்தியதாக குற்றம்சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். 

பின் தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட உதயசிறிக்கு, கடந்த மாதம் 2ம் திகதி இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது..  இதனையடுத்து இந்த பெண்ணின் குடும்ப நிலைமையை கருத்தில் கொண்டு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினராலும் ஜனாதிபதியிடம் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தன. 

இவரது விடுதலைக்காக சில அமைப்புகள் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுக்களையும் தாக்கல் செய்திருந்தன.  இதனையடுத்து ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட இவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.