Breaking News

வீஷ்மாச்சாரியாரின் இடத்தில் மைத்திரி

பாண்டுவின் அரச சபையில் தலைமைத் தளபதியாக இருந்தவர் வீஷ்மர். கங்கை மைந்தன் என்று அடையாளப்படுத்தப்படும் வீஷ்மர் தனக்குக் கிடைக்க வேண்டிய அரசாட்சியை தன் தம்பியர் ஆள்வதற்காக விட்டுக் கொடுத்தவர். அது மட்டுமல்ல தலைமைத்தளபதி என்பதால் துரியோதனனுக்காக போரிடவும் அவர் தயங்கிலர். 

அதேநேரம் நீதியின் பெயரால் பாண்டவர்கள் வெற்றி பெறவேண்டும் என்பதும் அவரின் பெரு விருப்பாக இருந்தது. எதுவாக இருப்பினும் பிதாமகர் என்று வீஷ்மர் போற்றப்படுவதற்குக் காரணம் தன் தந்தையின் விருப்பிற்காக தன் தம்பியை அர சாளட்டும் என்று ஆட்சிப் பொறுப்பை துறந்தமையாகும். 

பொதுவில் ஒரு சனசமூக நிலையத்தின் தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்க விரும்பம் இல்லாத இந்த உலகில் பதவிகளைத் தியாகம் செய்வது; தமக்கு இருக்கக் கூடிய அதிகாரங்களைத் துறப்பது என்பன போற்றப்படவேண்டிய அம்சங்கள். 

அந்த வகையில் இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போற்றப்பட வேண்டியவர். ஜனாதிபதி என்ற பதவிக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்று அந்த பதவியில் இருப்பவர் நினைப்பாராயின் அதற்குள் பொதுமை உள்ளது.

தனக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களை குறைத்து இந்த நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்த ஜனாதிபதி மைத்திரியை நாம் பாராட்டுவதில் எந்தக் குறையுமில்லை.

19ஆவது திருத்தச் சட்ட மூலத்தால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை என்றால் எதுவுமே இல்லை என்பதே முடிவு.ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையில் தமிழர்கள் தீமைகளை அனுபவித்தனர்.

அதேநேரம் இலங்கை என்ற ஒட்டுமொத்தப் பார்வையில் நம் நாட்டுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி முறை நல்லதல்ல என்பது பட்டறிவில் கண்ட உண்மை. எனவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி முறைமையில் தளர்வை ஏற்படுத்துவது நல்லது. அந்த நல்ல காரியத்தை இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தொடக்கம் மகிந்த ராஜபக்­ வரையான எவரும் செய்யவில்லை.

மாறாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று நான்கு மாதங்களே அந்தப் பதவியில் இருந்த மைத்திரி அதனைச் செய்தார் எனில், அவரை நாட்டிற்கு ஏற்ற தலைவர் என்று சொல்வதில் மிகையில்லை.

19ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றுதில் இடையூறுகள் இருந்தபோது-அவ்வாறான சந்தர்ப்பம் தனக்கு சாதகமானது என்ற சூழ்நிலையிலும் அவற்றை இம்மியும் பொருட்படுத்தாமல் 19 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றியே தீருவேன் என்பதில் உறுதியாக இருந்து அதனை நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்திரியை நாட்டு மக்கள் கரகோசம் செய்து பாராட்டலாம். 

-வலம்புரி ஆசிரியர் தலையஙகம்