Breaking News

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட 150,000 இராணுவத்தினர் வடக்கிலே உள்ளனர் - வடக்கு முதல்வர்

தொடர்ச்சியான இராணுவ பிரசன்னம் தமிழ் மக்களுக்கு மிக மோசமான ஒரு பின்னடைவு என்றும் அதேபோல வடக்குக்கு நீர் வழங்குதல் என்ற போர்வையில் வெளி இடங்களில் இருந்து சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றுவதும் தீவிரமான ஒரு பிரச்சனை என்றும் இது குடிப்பரம்பலை பெரிதும் பாதிக்கிறது என்றும் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் போருக்குப் பின்னர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பில் கலிபோர்னியாவின் ஓக்லான் ஆய்வு நிறுவகம் இலக்கைக்கு வியஜம் செய்து நடத்திய ஆய்வின் அறிக்கை ( யுத்தத்தின் நீண்ட நிழல் ) கலிபோர்னியாவிலநேற்று வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த வெளியீட்டு நிகழ்வை ஒட்டி தொலைபேசி ஊடாக நடைபெற்ற சர்வதேச செய்தியாளர் மகா நாட்டில் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இருந்து தொலைபேசி மூலம் கலந்து கொண்டு அறிமுக உரை ஆற்றினார். இந்த நிகழ்வில் பல சர்வதேச ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

13 ஆவது திருத்த சட்டம் மூலம் மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள அற்பமான அதிகாரத்தை மகாவலி அதிகாரசபை அத்து மீறுவதுடன் எமது நிலங்களையும் அந்த நிலங்கள் மீதான எமது உரிமைகளையும் இல்லாமல் போகச் செய்யும் வல்லமையையும் கொண்டிருக்கிறது என்றும் தனது பேச்சில் கூறிய விக்னேஸ்வரன், ஆனால் , இன்று வரை மகாவலி ஆற்றில் இருந்து இன்று வரை வடக்குக்கு ஒரு துளி நீர் கூட வரவில்லை என்று சுட்டிக் காட்டினார்.

வளமான நிலங்களில் இராணுவம் விவசாயம் செய்து அந்த அறுவடைகளை பெற்றுக்கொள்ளும் அதேவேளை அந்த நிலங்களுக்கு சொந்தமான தமிழ் மக்கள் தற்காலிக இடங்களில் அகதிகளாக வாழ்கின்றனர் என்றும் இராணுவம் மிகப்பெரும் அளவில் வியாபார முயற்சிகளிலும் , தமது சொத்துக்களை பெருக்குவதிலும், நிர்மாண செயற்திட்டங்களிலும், சுற்றுலாத்துறை செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்,

“அனேகமாக போர்க்குற்றங்களில் ஈடுபட்ட 150,000 இராணுவத்தினர் வடக்கிலே நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ளமை எமது முன்னேற்றத்தை பாதிக்கிறது.எமது மக்களின் வளமான நிலங்கள் மற்றும் வீடுகள் இராணுவத்தினால் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் மேலும் நிலங்களையும் வீடுகளையும் வசப்படுத்துவதற்கான விண்ணப்பங்கள் இராணுவத்தால் மேற்கொள்ளப்படுகிறது. என்னால் சாத்தியமான அளவுக்கு அவற்றை நிராகரித்திருக்கிறேன்.

இலங்கையின் மிகப்பெரிய ஆறான மகாவலியில் இருந்து வடக்குக்கு நீரை கொண்டு வருதல் என்ற போர்வையில் எமது மாகாணத்துக்குள் நிலங்கள் துப்பரவு செய்யப்பட்டு திறந்துவிடப்பட்டு வெளி இடங்களில் இருந்து சிங்கள மக்கள் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்படுகிறார்கள்.

13 ஆவது திருத்த சட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள அற்பமான அதிகாரத்தை மகாவலி அதிகாரசபை அத்து மீறுவதுடன் எமது நிலங்களையும் அந்த நிலங்கள் மீதான எமது உரிமைகளையும் இல்லாமல் போகச் செய்யும் வல்லமையையும் கொண்டிருக்கிறது. ஆனால் , இன்று வரை மகாவலி ஆற்றில் இருந்து இன்று வரை வடக்குக்கு ஒரு துளி நீர் கூட வரவில்லை.

இந்த நிலங்களில் தமது உரிமத்துக்கான உறுதிகளை தமிழ் மக்கள் வைத்திருக்கின்ற நிலையில் அங்கு குடியேற்றப்பட்டுள்ள சிங்கள மக்களுக்கு முன்னைய அரசினால் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய அரசாங்கம் வந்த பின்னரும் இதனை ஒழுங்குபடுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று கூறினார்.