Breaking News

பாக். - சிம்பாபே கிரிக்கெட் போட்டி நடந்த மைதானத்துக்கு அருகில் தற்கொலைத் தாக்குதல்

லாகூர் கடாஃபி மைதானத்தில் நேற்று நடந்த பாகிஸ்தான் - சிம்பாப்வே போட்டியின்போது, மைதானத்துக்கு வெளியே தற்கொலைப்படைத் தாக்குதல் முயற்சி நடந்துள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. 

இதனால் நாளை நடக்க உள்ள 3-வது ஒருநாள் போட்டி இரத்தாகும் வாய்ப்பில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை கொண்டுள்ளது.  கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான் - சிம்பாப்வே இடையே 2-வது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. முதலில் சிம்பாப்வே அணி துடுப்பெடுத்தாடி 268 ஓட்டங்களைக் குவித்தது. 

பின்னர் பாகிஸ்தான் பதிலளித்து ஆடிக்கொண்டிருந்தபோது, இரவு 09.00 மணி அளவில், மைதானத்தின் வெளியே பலத்த சத்தம் கேட்டது. இது மைதானத்தின் உள்ளே இருந்த அனைவருக்கும் கேட்டது. ஆனால், டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் சத்தம் கேட்டது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தகவல் வௌியிட்டது. 

இப்போது இதைப் பற்றிய உண்மை விவரங்கள் வெளிவந்துள்ளன. நேற்று கடாஃபி மைதானத்தின் அருகே தற்கொலைப்படைத் தாக்குதல் முயற்சி நடந்ததாகவும் அதில் ஒரு காவலர் உட்பட இருவர் இறந்து போயிருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பெர்வயாஸ் ரஷீத் கூறும்போது, கடாஃபி மைதானத்தின் மீது நடைபெற இருந்த தற்கொலைப்படைத் தாக்குதல் முயற்சி தீரமிக்க காவல்துறையால் முறியடிக்கப்பட்டுள்ளது என்றார். 

கடாஃபி மைதானத்தின் ஒரு கிலோ மீட்டர் அருகே உள்ள கல்மா செளக்கில், ஆட்டோ ரிக்சாவில் பொருத்தப்பட்டிருந்த காஸ் சிலிண்டர் வெடித்ததாக லாகூர் தலைமை பொலிஸ் ஆமின் வாய்ன்ஸ் தெரிவித்துள்ளார். 

இந்தச் சம்பவத்தால் நாளை நடக்க உள்ள 3-வது ஒருநாள் போட்டி திட்டமிட்டப்படி நடக்குமா என்கிற கேள்வி எழுந்தத. ஆனால், இதனால் பாதிப்பு நேராது. 3-வது ஒருநாள் போட்டி கட்டாயம் நடைபெறும். அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு விட்டன. 27,000 இரசிகர்கள் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வருவார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் அக்பர் கூறியுள்ளார். 

கடந்த 2009-இல் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை வீரர்கள் சென்ற பேருந்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்த சம்பவத்துக்குப் பின், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் எந்த அணியும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்லவில்லை. 6 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, சமீபத்தில் சிம்பாப்வே அணி பாகிஸ்தான் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.