Breaking News

பாராளுமன்றம் எப்போது கலைக்கப்படும்?

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முன்னதாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விடுமெனவும் அநேகமாக இம்மாத நடுப்பகுதியில் நடைபெறலாமெனவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

அதாவது, எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபிப்பதற்கான அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்படவுள்ளது. இதன் பின்னர் பாராளுமன்றத்தை கொண்டு செல்வதில் அர்த்தமில்லையென ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தவிர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகள் நடவடிக்கையெடுத்துள்ளன. இந்நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டால் பாராளுமன்றம் கலைக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

எனினும், மகிந்த ஆதரவு தரப்பினர் எதிர்வரும் 9ஆம் திகதி பாராளுமன்ற அமர்வில் நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் சமர்பிக்கவுள்ளதாக கூறியுள்ளனர். இதுவரை 60 பேர் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பெரும்பான்மையான ஆதரவு பெற்றுக்கொள்வார்கள் என்பது சந்தேகமே. இவ்வாறானதொரு நிலைமையில் பாராளுமன்றத்தை நடுப்பகுதியில் கலைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் தந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.