Breaking News

இலங்கையின் எதிர்கால வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கப் போகும் தேர்தல்

இலங்கையானது ஐ.நா மனித உரிமைகள் சபையை எதிர்ப்பதா அல்லது ஒத்துழைப்பை வழங்குவதா என்பதையும் இது கீழைத்தேய நாடுகளுடன் நட்புறவைத் தொடர்வதா அல்லது மேற்குலக நாடுகளுடன் அணிசேர்வதா என்பதையும் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலே தீர்மானிக்கும். 

இவ்வாறு the diplomat ஊடகத்தில் Peshan Gunaratne மற்றும் J. Berkshire Miller ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நி்த்தியபாரதி.

இலங்கையின் கேந்திர மூலோபாய அமைவிடமானது இந்திய மாக்கடல் பிராந்தியம் மீதான போட்டியாளர்களான சீனா, இந்தியா மற்றும் யப்பான் உட்பட பல்வேறு நாடுகளினதும் இராஜதந்திர இலக்காக இதனை மாற்றியுள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சீனாவை இலங்கை முதன்மைப்படுத்தியது. குறிப்பாக மிகப் பாரிய கரையோரத் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கான அனுமதியை சீனாவுக்கு இலங்கை வழங்கியது. இந்தத் திட்டங்கள் மற்றும் சீனா நோக்கிய மகிந்த அரசாங்கத்தின் நட்பு சார் கோட்பாடுகள் அனைத்தும், மைத்திரிபால சிறிசேன இவ்வாண்டு ஜனவரி மாதம் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மாற்றமடைந்துள்ளன.

ராஜபக்சவின் சீன ஆதரவுக் கொள்கையை மாற்றுவதில் சிறிசேன அரசாங்கம் தயக்கம் கொண்டிருக்காத அதேவேளையில், அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடனான முறிந்து போன கொழும்பின் உறவை மீளவும் கட்டியெழுப்புவதில் இலங்கையின் புதிய அரசாங்கம் முனைப்புக் காண்பிக்கிறது.

சீனாவின் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டதானது புதிய அரசாங்கத்தின் மிக முக்கிய நகர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கும் மேலாக, சீனாவின் நிதியுதவியுடனான மிகப் பாரிய திட்டங்களையும் இலங்கை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. இதற்கான கேள்விப் பத்திரங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, வடக்கு நோக்கிய அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கான திட்டமானது இது தொடர்பான சரியான விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு ராஜபக்ச அரசாங்கம் இத்திட்டத்திற்கான செலவீனத்தை அதிகரித்துக் காண்பித்துள்ளதா அல்லது இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சீனா தனது நாட்டின் நிறுவனங்களான சீனத் தேசிய இலத்திரனியல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒத்துழைப்பு மையம் மற்றும் சீன விண்வெளி தொலை நோக்க அனைத்துலக வர்த்தக மையம் என்பவற்றின் உதவியுடன் தாமரைக் கோபுரம் நிர்மாணிக்கப்படுவதாக சீனா கூறுகின்ற போதிலும் ‘கொலையாளியின் தண்டாயுதத்தைப்’ பயன்படுத்துவதற்காகவே இக்கோபுரம் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என தென்னாசிய ஆராய்ச்சியாளர் குழு தெரிவித்துள்ளது.

சீனாவின் இவ்வாறான முன்னெடுப்புக்கள் இலங்கையுடனான ‘மூலோபாய ஒத்துழைப்புக் கூட்டாளி’ என்கின்ற புரிந்துணர்வை வலுக்குன்றச் செய்திருக்கலாம். சீனாவின் உதவி வெளியுறவு அமைச்சர் சிறிலங்காவுக்கான தனது உத்தியோகபூர்வ பயணத்தை பெப்ரவரி 5 தொடக்கம் 7 வரை மேற்கொண்டிருந்தார். இவர் சீனாவின் சிறப்புத் தூதராகவே இலங்கைக்கான  தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இலங்கையும் சீனாவுக்கும் இடையில் அதிகரித்து வரும் மூலோபாய உறவு தொடர்பில் இந்தியா அதிருப்தியடைந்துள்ளதால் இந்தியா, சீனா மற்றும் சிறிலங்கா ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையில் முத்தரப்புப் பேச்சுக்கள் நடாத்துவதென சீன அதிபர் தீர்மானித்திருந்தார். இருப்பினும், மைத்திரிபால சிறிசேன இலங்கையின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அண்மையில் சீனாவின் கப்பல்கள் சிறிலங்காத் துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னர் சீனாவுடனான உறவுநிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான முரண்பாடு அதிகரித்து வரும் நிலையில், தனது அனைத்துக் காரியங்களுக்கும் நட்பாக இருக்கும் பாகிஸ்தானுக்கு சீனா 46 பில்லியன் டொலர் பெறுமதியான சக்தி மற்றும் கட்டுமான முதலீட்டுத் திட்டங்களுக்கான நிதியை வழங்கியுள்ளது.

இலங்கையின் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் பின்னர், திட்டமிட்டபடி சீனாவுடனான இலங்கையின் உறவுநிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சீனா கருதுகிறது. இந்தநிலையை மாற்றுவதற்காக, கடந்த மார்ச் மாதத்தில் சீனாவுக்கான உத்தியோகபூர்வப் பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு சீன அரசாங்கம், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுத்தது. சீனாவுக்கான சிறிசேனவின் பயணத்தின் போது கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

இத்தீர்மானமானது சீனா தனது கரையோர பட்டுப்பாதைத் திட்டம் மற்றும் ஒரு அணை மற்றும் ஒரு வீதி என்கின்ற திட்டத்தை நிறுவுவதற்கும் இதன் மூலமாக தென்னாசியாவிலுள்ள முக்கிய நாடுகளுடன் இணைப்பை ஏற்படுத்துவதற்கும் வழிவகுத்துள்ளது. இதேவேளையில், இந்தியாவானது தனது பிராந்தியத்தில் சீனாவால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பாக அதிருப்தியடைந்துள்ளது. சீனாவால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் பாரிய திட்டங்கள் மற்றும் கட்டுமான அபிவிருத்தித் திட்டங்கள் போன்றன தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் விழிப்புடன் நோக்குகிறது.

இதற்கும் மேலாக, முத்துமாலை மற்றும் கரையோர பட்டுப்பாதைத் திட்டம் என அழைக்கப்படும் சீனாவின் மூலோபாய இலக்கை அடைவதற்கு இலங்கை மையமாகப் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பிலும் இந்தியா கவனம் செலுத்தியுள்ளது. கடந்த ஆண்டு செப்ரெம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இரண்டு தடவைகள் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்றமையானது இந்தியாவை மேலும் ஆத்திரம் கொள்ளச் செய்தது.

மகிந்த சிந்தனை என்கின்ற தனது தேர்தல் விளக்கவுரையின் ஊடாக ராஜபக்ச அணிசேரா வெளியுறவுக் கோட்பாட்டைப் பின்பற்றினார். இருப்பினும் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சீனாவுடனான உறவு நிலை மிக நெருக்கமாகக் காணப்பட்டது.

மேற்குலக நாடுகளால் உருவாக்கப்பட்ட ஆக்கிரமிப்புக் கோட்பாடுகள் உட்பட பல்வேறு காரணிகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் வழங்கப்பட்ட அழுத்தங்கள், இலங்கையின் கட்டுமான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இந்தியாவின் பங்களிப்பு போதியளவில் வழங்கப்படாமை, புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் போன்றன சீனாவிடம் இலங்கை அதிகம் தங்கியிருக்க வேண்டிய நிலையைத் தோற்றுவித்தன.

இந்த நிலை சிறிசேன தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மாற்றமுற்றது. இந்தியாவிற்கு சிறிசேன அரச முறைப் பயணத்தை மேற்கொண்டமை இந்திய – இலங்கை உறவில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்கியது.

இப்பயணத்தின் மூலம் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் விரிசலடைந்திருந்த உறவு மீளவும் கட்டியெழுப்பப்பட்டது. இதன்பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான தனது வரலாற்று முக்கியத்துவம் மிக்க பயணத்தை மேற்கொண்டதானது இவ்விரு அயல்நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தியது.

இதேபோன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவைக் கட்டியெழுப்ப முடியும் என்கின்ற நம்பிக்கையுடன் பெல்ஜியத்திற்குப் பயணம் செய்திருந்தார். மங்கள சமரவீர, பெல்ஜிய வெளியுறவு அமைச்சர் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து அனைத்துலக மீன்பிடி சட்டங்கள் மற்றும் ஜி.பி.எஸ் வரிச்சலுகை தொடர்பான மீள் தகைமைப்படுத்தல் முறைமை தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

இதேபோன்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை மே மாதத்தில் மேற்கொண்டிருந்தார். இது மேற்குலகுடனான இலங்கையின் வெளியுறவுக் கோட்பாடு மாற்றப்பட்டுள்ளமைக்கான பிறிதொரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இலங்கைக்கு நிதியுதவி அளிப்பதாக கெரி தனது பயணத்தின் போது வாக்களிக்காவிட்டாலும் கூட, இலங்கையுடன் ஆண்டு தோறும் சந்திப்புக்களை மேற்கொள்வதற்கான உறுதிப்பாட்டை வழங்கியிருந்தார்.

அத்துடன் இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு பொருளாதார வளர்ச்சி, வர்த்தக மற்றும் முதலீடு தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு அமெரிக்க வல்லுனர்களை இலங்கைக்கு உடனடியாக அனுப்புவதாக ஜோன் கெரி வாக்களித்திருந்தார். இதற்கப்பால், இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மீளவும் புதுப்பிப்பதுடன், அதனைக் கட்டியெழுப்பி, பலப்படுத்துவதாகவும் இணக்கம் காணப்பட்டது.

இலங்கையில் மீளிணக்கப்பாடு, நீதி மற்றும் பொறுப்புக்கூறுதல் போன்றவற்றைக் கட்டியெழுப்பி, மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஜனநாயக நிறுவகங்களைப் பலப்படுத்தல் போன்றன தொடர்பில் அமெரிக்கா-இலங்கைக்கிடையில் ஒத்துழைப்புப் பேணப்படும் எனவும் கெரி உறுதி கூறியிருந்தார்.

வோசிங்ரன் மற்றும் கொழும்பிற்கு இடையிலான அதிகரித்துவரும் புரிந்துணர்வானது மேலும் அதிகரிக்கப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இலங்கைக்கான தனது பயணத்தை மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதால் இதன்மூலம் இது மேலும் பலப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

கெரி, இலங்கைக்கான தனது பயணத்தை மேற்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் இலங்கை கடற்படையைச் சேர்ந்த மூத்த பிரதிநிதிகள் குழு, இலங்கை கரைக்கு அப்பால் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான Carl Vinson கப்பலுக்கு சென்றமை, இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இராணுவ ஒத்துழைப்பு மீளவும் புதுப்பிக்கப்பட்டுள்ளமைக்கான பிறிதொரு சமிக்கையாகும்.

சிறிசேன அரசாங்கம் என்பது பல கட்சிகளைக் கொண்ட ஒரு அரசாங்கமாகும். இது பல்வேறு சட்டச் சிக்கல்களை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது மிகப் பலமான எதிர்க்கட்சியாக உள்ளது. அத்துடன் இதன் பெரும்பான்மை உறுப்பினர்கள் மகிந்தவைப் பிரதமராகக் கொண்டுவர வேண்டும் என கங்கணங்கட்டி நிற்கின்றனர். இந்நிலையில், பெரும்பான்மை ஆதரவுடன் அரசாங்கத்தை அமைப்பதற்காக செப்ரெம்பருக்கு முதல் தேர்தலை நடாத்த வேண்டும் என்பதில் ஐ.தே.க உறுதியாக நிற்கிறது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி அல்லது தேசிய அரசாங்கம் நடைபெறவுள்ள தேர்தல் மூலம் ஆட்சியமைக்குமா அல்லது இல்லையா என்பதும் தற்போது சிறிசேனவின் வெளியுறவுக் கோட்பாடு தொடர்ந்தும் பேணப்படுமா என்பதும் தெளிவில்லை. இதேவேளையில், ‘ஆச்சரியங்களை உள்ளடக்கிய’ அறிக்கை ஒன்றை வரும் செப்ரெம்பர் மாதத்தில் இலங்கைஎதிர்பார்க்க முடியும் என நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்திக்கான முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், ஐ.நா உயர் ஆணையாளர் செய்ட் பின் ராட்டுடனான தனது சந்திப்பின் பின்னர் தெரிவித்திருந்தார்.

இலங்கையானது ஐ.நா மனித உரிமைகள் சபையை எதிர்ப்பதா அல்லது ஒத்துழைப்பை வழங்குவதா என்பதையும் இது கீழைத்தேய நாடுகளுடன் நட்புறவைத் தொடர்வதா அல்லது மேற்குலக நாடுகளுடன் அணிசேர்வதா என்பதையும் இலங்கையில்  நடைபெறவுள்ள பொதுத்தேர்தலே தீர்மானிக்கும்.