Breaking News

அமெரிக்க ஆய்வு நிறுவன அறிக்கையை மறுக்கிறது இலங்கை


இலங்கையில் போருக்குப் பின்னரும், சிறுபான்மையினர் மீது மௌனப் போர் தொடர்வதாக அமெரிக்க ஆய்வு மையமான ஓக்லன்ட் நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது.

வடக்கு மாகாணம் தொடர்பான புதிய அரசாங்கத்தின் அணுகுமுறையில் முக்கியமான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக, இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். “கடந்த ஜனவரி மாதம் சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்த இராணுவப் பின்னணி கொண்ட ஆளுனர்கள் மாற்றப்பட்டு, சிவில் பின்னணி கொண்ட ஆளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் படையினரின் சோதனைச் சாவடிகள் தளர்த்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த 1013 ஏக்கர் காணிகள் வடக்கு மாகாணத்திலும், அதையடுத்து சம்பரில், 818 ஏக்கர் காணிகளும், விடுவிக்கப்பட்டுள்ளன.

காணாமற்போனோர் தொடர்பான விடயத்தில், தீவிரவாதச் செயற்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை வெளியிடுவதன் மூலம், தமது உறவுகள் குறித்து அவர்களின் உறவினர்கள் சிறைச்சாலைகளில் தேடுதல் நடத்தும் வாய்ப்பை பெற்றுக் கொடுக்க பிரதமர் பரிந்துரை செய்துள்ளார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.