Breaking News

செப்ரெம்பர் 17இல் முதலாவது முறைசாரா கூட்டத்தை ஜெனீவாவில் கூட்டுகிறது அமெரிக்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றை முன்வைப்பது தொடர்பான முதலாவது முறைசாரா கூட்டத்தை அமெரிக்கா வரும் செப்ரெம்பர் 17ஆம் திகதி ஜெனீவாவில் நடத்தவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர், எதிர்வரும் செப்ரெம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பாக அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மானம் தொடர்பாக ஆலோசனை நடத்தவே, வரும் செப்ரெம்பர் 17ஆம் திகதி, முதலாவது முறைசாரா கலந்துரையாடலுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறும் என்று, ஜெனீவாவுக்கான அமெரிக்க தூதுவர் கீத் ஹாப்பர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் தீர்மானம் ஒன்றை, நாடுகளின் குழுவின் சார்பாக முன்வைப்பதற்கு, அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும், கீத் ஹாப்பர் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்துள்ளார்.

இந்த விடயத்தில், இலங்கையின் புதிய அரசாங்கம் மற்றும், முக்கிய பங்காளர்கள் இணைந்து செயற்படுவர் என்று நம்புவதாகவும், அவர், ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஒழுங்கமைப்புக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.