Breaking News

உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது! என்கிறார் சுரேஸ்

உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். 

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளில் பல உள்ளக விசாரணைகளை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார் .சுயாதீனமான சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்றின் ஊடாக இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் கோரியுள்ளார். 

எவ்வாறெனினும், கட்சியின் தலைமைத்துவம் உள்ளக விசாரணைப்பொறிமுறைமை குறித்து எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகள், ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். 

அதேபோன்று மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானம் குறித்த உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை இன்னமும் கட்சி வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் உத்தேச தீர்மானத்தை கட்சித் தலைமை ஏற்றுக்கொண்டுள்ளதா என்பது பற்றி தமக்குத்தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.