Breaking News

கே.பிக்கெதிரான வழக்கு! குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (31) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் கே.பி, மீது நூற்றுக்கும் அதிகமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும், இவற்றில் அநேகமானவற்றுடன் கே.பிக்கு தொடர்பு இல்லை என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

அத்துடன், மேலும் பல சம்பவங்கள் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு மேலும் ஆறு வார காலம் அவகாசம் தேவை என்றும் சட்டத்தரணி நீதிமன்றில் குறிப்பிட்டார்.இதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி வரை குறித்த வழக்கை ஒத்திவைத்தார்.

மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட குமரன் பத்மநாதனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய ஜே.வி.பி. கே.பி. நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.