Breaking News

கைதிகளின் விடுதலைக்காக அரசுக்கு அழுத்தம் கொடுக்க கூட்டமைப்பு தயக்கம் - ஆனந்தசங்கரி

அரசாங்கத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தும் கைதிகளின் பொதுமன்னிப்பு விடயத்தில் கரிசனை கொள்ளாதது வேதனைக்குரிய விடயமாகும்.

நல்லாட்சிக்கு முக்கியமானர்கள் சிறுபான்மை இனத்தவர்கள் என்பதை வலியுறுத்தி அழுத்தங்களை பிரயோகிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயங்குவதன் காரணம், தமிழ் மக்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தமது அறிக்கையில், அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட வேண்டும் என அனைத்துத் தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வரும் இவ்வேளையில் புலிச்சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு விசேட மேல் நீதிமன்றம் அமைப்பதென்பது தமிழ் மக்களை மேலும் வேதனைக்குட்படுத்துவதாக உள்ளது. இதனால் பாரதூரமான விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படும்.

அரசாங்கத்தின் இந்த செயல் குறிப்பிட்ட ஒருசிலரை திருப்திப்படுத்துவதற்காவே என்று எண்ணத் தோன்றுகிறது. போர் இடம்பெறும் காலங்களில் இராணுவத்தினர் ஏதாவது காரணங்களுக்காக போர்க் களத்தை விட்டு ஓடிவிடுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆனால் புலிகள் அமைப்பில் அவ்வாறு செல்லமுடியாது. அவ்வாறான சூழ்நிலையும் அங்கில்லை. அவர்கள் தலைமையின் கட்டளையை ஏற்று செயற்பட்டுத்தான் ஆகவேண்டிய நிலையே. அவர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்பட செயற்பட முடியாது. ஆகவே இவ்வாறானதொரு சூழ்நிலையில் தாங்களாக விரும்பி குற்றங்கள் புரிந்தார்கள் என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே இந்த குற்றங்களுக்குமான முழுப்பொறுப்பாக புலி சந்தேகநபர்களை கூற முடியாது. ஆனால் குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இராணுவத்தினரை விட புலிகள் தான் தமிழ் மக்களை அதிகம் கொன்றார்கள் அதனால் அவர்களும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கூற்றை ஏற்றுதான் அரசாங்கம் செயற்படுகின்றதோ என்று எண்ணவும் தோன்றுகின்றது.

தற்போது சுமந்திரன் விடுத்துள்ள ஊடகச் செய்தியில் அரசியல் கைதிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இது யாருடைய உத்தரவாதத்தின் கீழ் இவ்வாறு கூறுகின்றார் என்பது தெரியவில்லை. பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளராக இவர் செயற்படுகின்றாரா? ஏற்கனவே இவரால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறந்துவிட்டன. இவ்வாறான அறிக்கைகளால் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாமென கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறானவர்கள் மௌனமாக இருந்தாலே சிறந்த பலனைத் தரும்.

புலி சந்தேக நபர்கள் விசாரிக்கப்படத்தான் வேண்டுமென்று அரசாங்கம் நினைத்தால் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் விசாரணை செய்யப்பட வேண்டும். அதாவது இளைஞர்கள் ஒன்றாக அணிதிரண்டு புலிகளின் கரத்தை பலப்படுத்த வேண்டுமென்றும், மண்ணை இழந்தாலும் ஈழப்போராட்டம் தொடரும் என்று மேடைகளில் முழங்கி இளைஞர்களை உசுப்பேத்தியதால்தான் பெரும்பாலான இளைஞர்கள் தங்களை புலிகள் இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்கள். அதேபோல் பல குடும்பஸ்தர்கள் புலிகளுக்கு தங்களால் இயன்றளவில் உதவினார்கள். புலிகளுக்கு உதவிபுரிந்தார்கள்; என்ற காரணத்துக்காகவே சிறைகளில் இன்றும் அவர்கள் விடுதலையின்றி வாடுகின்றார்கள். இவர்களை இவ்வாறான செயல்களுக்கு தூண்டிய காரணகர்த்தாக்கள் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களே.

தமிழர் விடுதலைக் கூட்டணியை பொறுத்தளவில் இலங்கை – இந்திய ஒப்பந்த காலத்தில் அனைத்து போராளி அமைப்புக்களின் போராளிகளுக்கு பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்டது போல் இன்றும் தமிழ் அரசியல் கைதிகளுக்கும்இ புலி சந்தேக நபர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென்ற நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

இலங்கை- இந்திய ஒப்பந்த காலத்தில் அன்றைய பாரதப் பிரதமர் அமரர்கள் ராஜீவ்காந்தி, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆகியோரிடம் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியது தமிழர் விடுதலைக் கூட்டணியே. இன்றைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஜே.வி.பி யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா ஆகிய இருவரும் ‘கைதிகளை உடன் விடுவிக்காவிடின் தமிழர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது’ எனவும் ‘தமிழ் கைதிகளை விடுவிப்பதில் இனியும் மௌனம் காப்பது விரிசலை ஏற்படுத்தும்’ எனவும் கூறியுள்ளனர்.

ஆனால், இன்று அரசாங்கத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தும் கைதிகளின் பொதுமன்னிப்பு விடயத்தில் கரிசனை கொள்ளாதது வேதனைக்குரிய விடயமாகும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.