Breaking News

போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் கவனம் செலுத்த இலங்கை வருகிறார் டேவிட் கமரூன்

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க, இலங்கை அரசாங்கம் உருவாக்கவுள்ள விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மை குறித்து இந்தப் பயணத்தின் போது, பிரித்தானியப் பிரதமர் கூடுதல் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மோல்டா சென்றிருந்த இலங்கை ஜனாதிபதியை, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

இந்தச் சந்திப்பின் போது, போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கான பொறிமுறையை உருவாக்க கொமன்வெல்த் அமைப்பு இலங்கைக்கு உதவிகளை வழங்கும் என்று டேவிட் கமரூன் உறுதியளித்தார்.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் பெருந்தொகையான மக்களுக்கு சாதகமான பயன்கிடைப்பதனை இலங்கை ஜனாதிபதி உறுதி செய்ய வேண்டும் எனவும் டேவிட் கமரூன் கோரிக்கை விடுத்தார்.

இதற்காக, இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் பிரித்தானிய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் இலங்கை ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

அதேவேளை, இலங்கை அரசாங்கத்தினால் கடத்த 10 மாதகாலத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், ஜனநாயகம், மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கும் பிரித்தானியகப் பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.