Breaking News

85 அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க அனுமதி

85 அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான அனுமதியினை அரசாங்கம் அளித்துள்ளது என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டத்தின் நிறைவில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

85 அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான அனுமதியினை அரசாங்கம் அளித்துள்ளது. அதில் பல சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. 85 பேரில் மூவருக்கு உடனடியாக புனர்வாழ்வு அளிக்கக் கூடியதாக இருந்தது. 

அந்த விடயத்தினை உடனடியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுக்கும் அறிவித்திருக்கின்றேன். அதனைத் தொடர்ந்து 20 பேரை பிணையில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 

குறித்த அரசியல் கைதிகளுக்கு பிணை விண்ணப்பம் செய்யுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடாகவும் அறிவுறுத்தல்கள் சென்றிருப்பதாக நான் அறிந்துள்ளேன். 

நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படும் 30 அரசியல் கைதிகள் எவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டார்களோ, அதேபோல், மேல் நீதிமன்றில் விசாரணை நடந்துகொண்டிருக்கின்ற கைதிகளும் கூட முதன்னிலையில், பிணையில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

சில வழக்குகளை பாரிய குற்றங்களாக அரசாங்க தரப்பில் பார்க்கின்றார்கள் என்றால், அதை அப்படியே வைத்து விட்டு, ஏனையோர்களை முதலில் விடுவிக்க வேண்டும். மற்றவர்களின் விடுதலையை உறுதி செய்து விட்டு, அதன்பின்னர் பாரிய குற்றங்கள் என்ன, ஏன் பாரிய குற்றங்கள் என்பது பற்றி ஆராய வேண்டும். 

பாரிய குற்ற வழக்குகள் என 15 வழக்குகளை சட்டமா அதிபர் திணைக்களம் சொல்லியிருக்கின்றார்கள். பாரிய 15 வழக்குகளிலும் 30ற்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் இருக்கலாம். அனைத்து சந்தேகநபர்களுக்கும் ஒரே மாதிரியான ஈடுபாடுகள் அந்த குற்றச்செயல்களுடன் இருக்காது. 

உதவி செய்தவர்கள், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யாதவர்கள் எனப் பலர் இருக்கின்றார்கள். ஆகவே, சந்தேகநபர்களின் ஈடுபாட்டினையும் அடிப்படையாக வைத்து, அந்த வழக்குகளை பற்றி பேசுகின்ற போது, அவர்களையும் கட்டம் கட்டமாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுப்போம். 

இறுதியில், எவ்வளவு தான் பாரிய குற்றமாக இருந்தாலும், அவர்கள் நீண்டநாள் சிறையில் இருந்தவர்களாக இருந்தால், இவர்கள் இதுவரை சிறையில் இருந்த காலத்தினை கணக்கில் எடுத்து எவ்விதமான பாரிய குற்றமாக இருந்தாலும், அவர்களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுப்போம். 

அனைவரும் சற்று பொறுமை காக்க வேண்டும். கடந்த 6 வருட காலமாக ஒரு அரசியல் கைதியும் கூட விடுவிக்கப்படாத நிலை இருந்தது. பழைய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தோம். சிறைச்சாலைகளுக்கு கடிதம் கொடுத்திருந்தோம். அரசாங்கம் வெளிநாடுகளுக்கும் கூட உறுதியளித்திருந்தது. ஆனால், இவை எதுவும் நடக்காமல் இருந்தது. 

சிறிது சிறிதாக ஏதோ நடக்க ஆரம்பித்துள்ளது. அதில் எமக்கு திருப்தியில்லை, திருப்தியில்லாமல் இருந்தாலும் கூட ஏதோ ஒன்று நடக்க ஆரம்பித்துள்ளது. அரசியல் கைதிகள் இப்போது சரி வீட்டிற்கு செல்ல ஆரம்பித்துள்ளார்கள் என்பதனையும் நாங்கள் மறந்துவிடக்கூடாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.