Breaking News

எமக்கெதிராக யுத்தக்குற்றச்சாட்டுக்கள் எதுவுமில்லை வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கவில்லை -– ஜனாதிபதி

"யுத்­தக்­குற்றம்" தொடர்­பான எந்தவிதமான குற்­றச்­சாட்­டுக்­களும் எமக்­கெ­தி­ராக இல்லை என்­பதை நான் மிகவும் தெளி­வாகக் கூறுவேன். ஆரம்பக் கட்­டத் தில் யுத்­தக்­குற்றம் தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்கள் இருந்­தி­ருக்­கலாம். ஆனால் ஜெனீ­வாவில் கடந்த ஆண்டு நடை­பெற்ற மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தில் எமக்­கெ­தி­ராக எவ்­வித யுத்தக் குற்­றச்­சாட்­டுக்­களும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

அவர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்­பி­லேயே குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். மனித உரி மை மீறல்கள் தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்­களை நோக்­கு­மி­டத்து, நாம் ஐக்­கிய நாடுகள் சபையின் உறுப்­பி­னர்கள் என்ற வகையில், அதன் முக்­கிய விட­யங்­க­ளையும் யோச­னை­க­ளையும் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய நிலையில் உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

இரா­ணுவம் சர்­வ­தேச மற்றும் தேசிய சட்­டங்­க­ளுக்கு அமை­வா­கவே செயற்­பட்­டுள்­ளது. ஒருவர் தவ­றி­ழைத்­த­மைக்­காக முழு இரா­ணு­வத்­தையும் குற்றம் சாட்­ட­ மு­டி­யாது. தவ­றி­ழைக்­கப்­பட்­டமை கண்­ட­றி­யப்­பட்டால் யாரா­க­வி­ருந்தாலும் சட்ட ரீதி­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­மெ­னவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

சர்­வ­தேச தொலைக்­காட்­சி­யான அல்­ஜ­ஸீ­ரா­வுக்கு புதிய அர­சாங்கம், அதன் செயற்­பா­டுகள், பொறுப்­புக்­கூறல் தொடர்­பாக வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அச்­செவ்­வியில் ஜனா­தி­பதி குறிப்­பிட்ட முக்­கிய விட­யங்கள் வரு­மாறு,

வரு­டத்தின் முக்­கி­யத்­துவம்

எமது ஆட்­சிக்­கா­லத்தின் இரண்­டா­வது வருடம் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை இலக்­காக கொண்­டுள்­ளது. எமது நாட்டில் வறுமை அதி­க­மா­க­வுள்­ளது. மொத்த சனத்­தொ­கையில் 22 சத­வீ­த­மானோர் போசாக்கு குறை­பா­டு­டை­ய­வர்­க­ளாக உள்­ளனர். அதே­போன்று 15 முதல் 17 சத­வீ­த­மா­ன­வர்கள் நீரி­ழிவு நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளாக உள்­ளனர். 7முதல் 8 சத­வீ­த­மா­ன­வர்கள் யுத்­தத்­தாலும், சுகா­தார விட­யங்­க­ளாலும் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளா­க­வுள்­ளனர். ஆகவே இவற்றை மேம்­ப­டுத்த வேண்டும். அத­ன­டிப்­ப­டையில் இந்த வரு­டத்தில் நாட்டின் வறு­மையை ஒழித்து தேசிய அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுப்­ப­தற்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

வேலை­வாய்ப்பு

தேர்தல் காலத்தில் பத்து இலட்சம் வேலை­வாய்ப்பை உரு­வாக்­கு­வ­தாக கூறி­யி­ருந்தோம். இந்த திட்­டத்தின் பிர­காரம் அரச, தனியார் துறை­களில் அவ்­வாய்ப்­புக்கள் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளன. எமது வெளி­நாட்டுக் கொள்­கையின் பிர­காரம் அனைத்து நாடு­க­ளு­டனும் நாம் நட்­பு­ற­வு­களைக் கொண்­டுள்ளோம். அவ்­வு­ற­வு­களைப் பயன்­ப­டுத்தி எமது நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­தையே நோக்­காக கொண்­டி­ருக்­கின்றேன்.

குடும்ப அர­சியல்

முதலில் அந்த விட­யங்­களை தெளி­வு­ப­டுத்த விரும்­பு­கின்றேன். முத­லா­வ­தாக எனது சகோ­த­ர­ரொ­ருவர் டெலிக்கொம் நிறு­வ­னத்தில் பத­வியில் உள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. இதற்கும் குடும்ப அர­சியல் என்ற விட­யத்­திற்கும் பாரிய வேறு­பாடு காணப்­ப­டு­கின்­றது. டெலிக்கொம் நிறு­வ­னத்தை எடுத்­துக்­கொண்டால் அரச மற்றும் தனியார் துறையும் உள்­ள­டக்­க­மாக செயற்­ப­டு­கின்­றது.

இந்­நி­று­வ­ன­மா­னது வேறு அமைச்சின் கீழ் உள்­ளது. ஆகவே எனது சகோ­தரர் அரச நிரு­வா­கத்தில் உள்­வாங்­கத்தில் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. எனது மரு­மகன் தொடர்­பாக கூறப்­ப­டு­கின்­றது. அவ­ருக்கு எந்­த­வ­கை­யி­லுமே அதி­கா­ர­மிக்­க­வொரு பதவி வழங்­கப்­ப­ட­வில்லை. அவர் எனது தனிப்­பட்ட செய­ல­ணியில் கட­மை­யாற்­று­கின்றார்.

எனது மகன் தொடர்­பா­கவும் கருத்து வெளி­யி­டப்­பட்­டது. ஐக்­கிய நாடுகள் சபையின் அமர்­வுகள் இடம்­பெ­றும்­போது நாடொன்­றுக்கு குறிப்­பிட்­ட­ளவு ஆசன ஒதுக்­கீ­டுகள் காணப்­படும். நாட்டின் பிர­தி­நி­தி­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவே அவ்­வா­ச­னங்கள் அமை­யப்­பெறும். ஆனால், அந்த ஆசன ஒதுக்­கீட்­டுக்குள் எனது மகன் இருக்­க­வில்லை. அதனை குடும்ப அர­சி­ய­லாக கரு­து­வதை நான் முழு­மை­யாக நிரா­க­ரிக்­கின்றேன்.

இவ்­வா­றான விட­யங்­களில் அர­சி­ய­லுக்கு அப்பால் சென்று பார்க்­கப்­படல் வேண்டும். நான் அதி­கா­ரத்­திற்கு வரு­வ­தற்கு முன்னர் காணப்­பட்ட நிலை­மையை கருத்­திற்­கொள்ள வேண்டும். ஆகவே எனது எந்­த­வொரு அங்­கத்­த­வரும் அரச நிர்­வா­கத்தின் எந்­த­வொரு புள்­ளி­யிலும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.

குற்­றச்­சாட்­டுக்கள்

விமர்­ச­னங்கள் எப்­போதும் காணப்­படும். அதனை தவிர்த்­து­விட்டு யாராலும் செல்­ல­மு­டி­யாது. எனது மகன் அதில் பங்­கெ­டுத்­தமை யாருக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது? நாட்­டுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யதா? என்­பதை கவ­னத்தில் கொள்­ள­வேண்டும். அவ்­வாறு ஒன்றும் இடம்­பெ­ற­வில்லை.

ஊழல் மோச­டி­யா­ளர்­க­ளுடன் ஒப்­பந்தம்

ஊழல் மோச­டிகள் தொடர்பில் நான் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றேன். காட்­டு­தார்­பாரை நாட்டில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு நாம் ஆட்­சிக்கு வர­வில்லை. சட்டம் ஒழுங்கை சரி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தவே நாம் ஆட்­சிக்கு வந்­துள்ளோம். நல்­லாட்சி என்­பதை சொல்­ல­ளவில் மாத்­தி­ர­மன்றி அவ்­வாறே செயற்­ப­டுத்­து­வதே எமது நோக்­க­மாகும். ஆகவே ஊழல்­மோ­ச­டிகள் தொடர்பில் சட்­டத்தை உரிய வகையில் பயன்­ப­டுத்­துவோம்.

அவற்றை விசா­ரணை செய்யும் இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு, ஊழல்­மோ­சடி விசா­ரணை பிரிவு மற்றும் ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு ஆகி­யவை சுயா­தீ­ன­மாக இயங்கும் ஆணைக்­கு­ழுக்­க­ளாகும். இவற்றில் அர­சியல் தலை­யீ­டுகள் இடம்­பெ­று­வ­தில்லை. ஆகவே அந்த அதி­கா­ரி­க­ளுக்கு தமது கட­மை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு சந்­தர்ப்பம் அளிக்­க­வேண்டும்.

மந்­த­க­தியில் விசா­ரணை

விசா­ர­ணைகள் பக்­கச்­சார்ப்­பற்ற வகையில் ஒரு­ப­டி­மு­றை­யாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். அந்த நட­வ­டிக்­கை­களே தற்­போது இடம்­பெ­று­கின்­றன. பழி­வாங்கும் எண்­ணத்­துடன் சட்­டத்தை எவர் மீதும் பிர­யோ­கிக்க முடி­யாது. விசா­ர­ணைகள் செய்யும் அதி­கா­ரிகள் உரி­ய­வ­கையில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

அதற்­கான சந்­தர்ப்­பத்தை நாங்கள் அந்த அதி­கா­ரி­க­ளுக்கு ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்ளோம். ஆகவே இந்த விட­யங்கள் தொடர்பில் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் குழப்­ப­ம­டை­ய­வேண்­டிய தேவை­யில்லை. மோச­டிக்­கா­ரர்­க­ளையும், திரு­டர்­க­ளையும் பாது­காக்கும் நோக்கம் எனக்­கில்லை.

யாராக இருந்­தாலும் எந்தக் குடும்­பத்தைப் பின்­ன­ணி­யாகக் கொண்­டி­ருந்­தாலும் அதி­கா­ரிகள் தமது கட­மையை நிறை­வேற்­று­வார்கள். குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் பெறு­பே­று­களை வெளிப்­ப­டுத்தும் ஆண்­டாக 2016 அமையும் என்­பதை மிகத்­தெ­ளி­வாக கூறிக்­கொள்ள விரும்­பு­கின்றேன். எனவே விமர்­ச­னங்கள் தொடர்பில் குழப்­ப­ம­டை­ய­வேண்­டி­ய­தில்லை.

போர்க்­குற்றம்

ஒரு­வி­ட­யத்தை மிகத்­தெ­ளி­வாக கூறிக்­கொள்ள விரும்­பு­கின்றேன். எமக்கு எதி­ராக போர்க்­குற்­றச்­சாட்­டில்லை. ஆனால் ஆரம்ப கால­கட்­டத்தில் இவ்­வாறு கூறப்­பட்­டது. மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக குற்­றச்­சாட்­டுக்­களே எமக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே இந்தக் குற்­றச்­சாட்­டுக்­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்ட தீர்­மா­னத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்ள பரிந்­து­ரை­களை நிறை­வேற்­று­வ­தற்கு ஐக்­கிய நாடு­களின் உறுப்பு நாடு என்ற வகையில் நாம் கட­மைப்­பட்­டுள்ளோம்.

ஆகவே, அந்­தக்­க­டப்­பாட்டில் நாம் எமது நாட்டின் சுயா­தீ­னத்­தன்­மையை பாது­காத்தே செயற்­ப­டு­கின்றோம். அர­சி­ய­ல­மைப்­புக்கு உட்­பட்ட வகை­யி­லேயே செயற்­ப­டுவோம். இதற்கு சர்­வ­தேச தொழில்­நுட்ப ஆலோ­ச­னை­களை நாம் பெற்­றுக்­கொள்ள முடியும். ஆனால் இந்த நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு வெளி­ந­பர்­களின் தேவை எமக்கு ஏற்­ப­ட­வில்லை.

பக்­கச்­சார்­பற்ற வகையில் சுயா­தீ­ன­மாகச் செயற்­ப­டக்­கூ­டிய வகையில் நீதித்­துறை, குற்­ற­வி­சா­ர­ணைப்­பி­ரிவு மற்றும் இவ்­வா­றான விட­யங்கள் தொடர்பில் விசா­ரணை செய்­யக்­கூ­டிய கட்­ட­மைப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன.

வாக்­கு­று­தியில் பின்­வாங்கல்

வாக்­கு­ற­திகள் பின்­வாங்­கப்­ப­ட­வில்லை. அவ்­வாறு கூறு­வதை. அவற்றை நான் நிரா­க­ரிக்­கின்றேன். எந்­த­வ­கை­யிலும் வாக்­கு­று­தியில் பின்­வாங்­கப்­ப­ட­வில்லை. நாட்டில் காணப்­ப­டு­கின்ற சூழலை அறிந்­து­கொண்டு செயற்­ப­ட­வேண்டும். வேக­மாக இந்த விட­யங்­களை கையா­ள­மு­டி­யாது.

விசா­ரணை ஊடாக நாட்டின் மீதுள்ள குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து விடு­ப­டு­வதே எமது நோக்­க­மா­க­வுள்­ளது. இதற்­காக உண்­மை­களை அவ்­வாறே கண்­ட­றி­யப்­ப­ட­வேண்டும். குறிப்­பாக பொறுப்­புக்­கூறல் கடப்­பாட்­டி­லி­ருந்து வில­க­மாட்டோம். எமது விசா­ர­ணைகள் பக்­கச்­சார்­பற்ற தன்­மையும், வெளிப்­ப­டை­யான தன்­மை­யையும் கொண்­டுள்­ளன. அர­சாங்கம் என்ற வகையில் இந்த விட­யத்தில் நாம் நேர்­மை­யாக நடந்­து­கொள்வோம்.

பர­ண­கம ஆணைக்­குழு

போர்க்­குற்­றங்­களை எந்த அமைப்பு உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. கடந்த அர­சாங்­கத்­தி­னா­லேயே பர­ண­கம ஆணைக்­குழு ஸ்தாபிக்­கப்­பட்­டது. அதனை ஆணைக்­கு­ழு­வாக கொள்­வ­தை­விட, காண்­கா­ணிப்பு குழு­வாக செயற்­பட்­டுள்­ளது. கடந்த ஐ.நா.தீர்­மா­னங்கள் வெளி­வந்­ததன் பின்­னரே அந்த ஆணைக்­கு­ழுவின் இடைக்­கால அறிக்­கையும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அதில் போர்க்­குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து எங்கும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

போரின் இறுதி தரு­ணங்கள்

அந்த அறிக்கை அர­சாங்­கத்தால் வெளி­யி­டப்­பட்­டது. அது உத்­தி­யோ­க­பூர்­வ­மான அறிக்கை அல்ல. பாரா­ளு­மன்றில் அந்த அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தற்­கான காரணம், ஐ.நா.மனித உரிமை பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட தீர்­மா­னங்கள் பார­தூ­ர­மா­ன­வை­யென குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­தன. இதன்­போது பர­ண­கம அறிக்­கையை சுட்­டிக்­காட்டி அதில் அதனை விட முக்­கி­ய­மா­னவை குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­மையை சுட்­டிக்­காட்­டினோம். அங்கு இந்த அறிக்­கையை உத்­தி­யோக பூர்­வ­மா­ன­தாக குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. அந்த அறிக்­கையின் உள்­ள­டக்­கப்­பட்ட விட­யங்­களை அர­சாங்கம் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் உத்­தி­யோக பூர்­வ­மா­ன­தெனக் கூற­வில்லை. ஏனென்றால் அந்த விட­யங்கள் தொடர்பில் ஆராய வேண்­டி­யதன் தேவை காணப்­பட்­டது.

உத்­தி­யோ­க­பூர்­வ­மா­ன­தில்­லையா?

எமது அவ­தா­னங்கள் ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னங்கள் மீதே முக்­கி­ய­மாக காணப்­பட்­டன. அர­சாங்கம் அதற்கு எவ்­வாறு பதி­ல­ளிப்­ப­தென்­ப­தி­லேயே அதிக கவனம் செலுத்­தப்­பட்­டது.

புலிகள், இரா­ணுவம்

இந்த யுத்­தத்­துடன் இலங்கை இரா­ணுவம் மட்டும் தொடர்­பு­பட்­டி­ருக்­க­வில்லை. பயங்­க­ர­வா­தி­களும் தொடர்பு பட்­டி­ருந்­தனர். புலி­க­ளினால் வைத்­தி­ய­சா­லையின் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருந்­தாலும் அது பாரிய குற்­ற­மாகும். விடு­தலைப் புலிகள் அனைத்து சந்­தர்ப்­பத்­திலும் சர்­வ­தேச சட்­டங்­களை மீறியே செயற்­பட்­டி­ருந்­தனர். இலங்கை இரா­ணுவம் சர்­வ­தேச சட்­டங்­க­ளுக்கு உட்­பட்டும் தேசிய சட்­டத்தின் அடிப்­ப­டை­யி­லுமே செயற்­பட்­டது.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் இலங்கை இரா­ணு­வத்­தினைச் சேர்ந்­த­வொ­ரு­வரால் குற்­ற­மி­ழைக்­கப்­பட்­டதா என்­பதைக் கண்­ட­றி­யவே விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. தவ­றி­ழைக்­கப்­பட்­டி­ருந்தால், அதற்கு சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாக ஏற்­க­னவே கூறி­யுள்ளோம். அந்த தவறை யார் இழைத்­தி­ருந்­தாலும் அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். ஒருவர் குற்­ற­மி­ழைத்­த­மைக்­காக முழு இரா­ணு­வத்­தையும் சாட­மு­டி­யாது. ஏனென்றால் அர­சாங்­கத்­தினால் அவ்­வா­றான குற்­ற­மி­ழைப்­ப­தற்­கான கட்­ட­ளைகள் வழங்­கப்­ப­ட­வில்லை.

ஆகவே, விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டும்­போது அனை­வ­ராலும் சாட்­சி­களை வழங்­கு­வ­தற்கு முடியும். அதன்­பி­ர­காரம் தவ­றி­ழைத்­த­வர்கள் கண்­ட­றி­யப்­பட்டு தண்­டிக்­கப்­ப­டு­வார்கள்.

குற்­ற­வா­ளிகள் யார்?

குற்­ற­வா­ளிகள் யார் என்­பதை தற்­போது கூற­மு­டி­யாது. அதற்­கா­கவே தான் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. விசா­ர­ணைக்கு அப்பால் சென்று யார் மீதும் எம்மால் குற்றம் சுமத்­த­மு­டி­யாது.

தேசிய நல்­லி­ணக்க பொறி­முறை

தேசிய நல்­லி­ணக்கம் என்ற சொல்லைப் பயன்­ப­டுத்­து­வது போன்று அதனை செயற்­ப­டுத்­து­வ­தென்­பது எளி­தான விட­ய­மல்ல. 26ஆண்­டு­க­ளுக்கு அதி­க­மான கால­மாக நாட்டில் யுத்­தத்­தினால் வடக்கு, தெற்கு மக்­க­ளுக்­கி­டையில் பாரிய சந்தேகம் காணப்படுகின்றது. எனவே, மக்களின் இதயங்களை ஒன்றிணைக்கவேண்டும். இதனை இருப்புகள், செங்கற்கள், சீமெந்துகளை வைத்துக்கொண்டு செய்யமுடியாது. எமது அரசாங்கம் யுத்தத்திற்கான காரணத்தை அதற்கான தீர்வினை பொறிமுறையூடாக முன்வைக்கின்றது.

மக்களின் சந்தேகங்கள் களையப்பட்டு நாட்டின் அனைத்துப்பகுதியிலும் எமது மக்கள் சுதந்திரமாக வாழும் சூழல் உருவாக்கப்படவேண்டும்.

வடக்கு நிலைமை

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கூடிய முக்கியத்துவமளித்து செயற்பட்டு வருகின்றோம். கடந்த ஒருவருட காலத்தில் பல இராணுவ முகாம்களை அகற்றி, காணிகளை மக்களுக்கு வழங்கியுள்ளோம். அதேபோன்று 700 ஏக்கர் காணிப்பரப்பை மக்களுக்கு வழங்குவதற்காக அடையாளப்படுத்தியுள்ளோம்.

அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுகின்றன. உரியவர்களுக்கு காணிகளை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாக காணப்படுகின்றது. ஆகவே முப்படைகளின் தளபதிகளுக்கும் இந்தவிடயம் தொடர்பாக ஆலோசனை வழங்கியுள்ளோம். இந்த வருடம் ஜுன் மதத்திற்கு முன்னதாக மக்களின் அனைத்துக் காணிகளும் அடையாளம் காணப்படும். அதற்கான விசேட ஜனாதிபதி செயலணியொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கம்

26 வருட யுத்தத்தின் பின்னர் அதாவது 2009ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதிக்கு பின்னரான 5 வருட காலப்பகுதியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அடிப்படைக் காரணங்கள் கண்டறிந்து முன்னெடுக்கப்படவில்லை. புதிய அரசாங்கம் என்ற வகையில் அவ்வாறன பணிகளையே முன்னெடுக்கின்றோம். வடக்கு, தெற்கு உட்பட அனைத்து மக்களும் எமக்கு வாக்களித்து எம்மை ஆட்சிப்பீடமேற்றியுள்ளனர்.