Breaking News

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை உண்மை : மெக்ஸ்வல் பரணகம

இறுதி யுத்தத்தின்போது கணிசமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது உண்மையென்றும் எனினும் அதன் தொகையை சரியாக கூறமுடியாதெனவும், காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை, நேற்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்றைய முதலாவது நாள் அமர்வினைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

‘இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் காணாமல் போனோர் தொடர்பில், 18 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஒருவர் காணாமல் போனமை தொடர்பில், ஒன்றிற்கு அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களும் உள்ளன. அவ்வாறான முறைப்பாடுகள் குறித்து பரிசீலித்து வருகின்றோம். இதுவரையில் நாம் பரிசீலித்ததில், அவ்வாறு சுமார் 500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனால், உண்மையில் எத்தனை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என சரியாக கூறமுடியாது.

காணாமல் போனோர் தொடர்பில் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம், அதே வருடம் மே மாதம் 18ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் காணாமல் போனோர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை மாத்திரம் விசாரணை செய்து, அதன் இறுதி அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளோம்.

இறுதி யுத்தத்தின்போது கணிசமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது உண்மை. எனினும் கொல்லப்பட்ட மக்கள் தொடர்பான எண்ணிக்கையை சரியாக கூற முடியாதுள்ளது’ என்றார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது கட்டுக்கதையென, அண்மையில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையொன்றின்மூலம் தெரிவித்திருந்தது. அதேபோன்று, அவ்வாறான தொகையினர் கொல்லப்படவில்லையென்பதே இலங்கை அரசாங்கத்தின் கருத்தாகவும் உள்ளது.