Breaking News

‘அச்சத்தில் உள்ளோம்': கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அறிவழகனின் மனைவி

திடீரென நிகழ்ந்து விட்ட இந்த சம்பவத்தால் மிகவும் அச்சத்தில் உள்ளோம். என்ன காரணத்திற்காக எனது கணவர் கைது செய்யப்பட்டார் என்ற விடயம் எதுவும் தெரியவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் அறிவழகனின் மனைவி சித்திரா தெரிவித்துள்ளார்.

கலையரசன் என்றழைக்கப்படும் கணேசபிள்ளை அறிவழகன் (வயது 45) பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்ட பிராந்திய அலுவலகத்தில் வைத்து இவரை, குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். அறிவழகன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அவரது குடும்பத்தினரினால், மனித உரிமைகள் ஆனைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் நகுலன் என்றழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி சமூகமயப்படுத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி இதிமலசிங்கம் அரிச்சந்திரன் எனப்படும் ராம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளந் தெரியாதோரால் கடத்தப்பட்டார்.

பின்னர் இவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் பொறுப்பிலுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம், 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.