Breaking News

முன்னாள் போராளிகள் கைதும் நல்லாட்சி அரசின் கொடூர முகமும்

ஸ்ரீலங்காவில் ஆட்சி மாறி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன? ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒன்றரை வருடங்கள்கூட ஆகவில்லை. ஸ்ரீலங்காவின் பாராளுமன்றம்ஆட்சி அமைத்து ஒரு வருடம்கூட ஆகவில்லை. அதற்கிடையிலேயே ஸ்ரீலங்கா அரசின் நல்லாட்சி முகத்தின் சாயம் வெளுத்துவிட்டது. ஸ்ரீலங்கா அரசின் கொடூர இனவாத முகம் தெரிகின்றது.


அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான ராம் வெள்ளைவானில் வந்தவர்களால் கடத்தப்பட்டார்கள்என்ற ஒரு செய்தி வெளிவந்தது. பின்னர் அவர் கடத்தப்படவில்லை என்றும் கைதுசெய்யப்பட்டார் என்றும் ஸ்ரீலங்கா அரசால் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனியின் சிறப்புத் தளபதி நகுலன் அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

தோட்ட வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நகுலனை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு படையினர் கைதுசெய்துள்ளனர். அதுவும் சிவில் உடையில் வந்தவர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கலையரசனும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தக் கைதுகள் முன்னாள் போராளிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் சிவகரன்  பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிவகரனின் கைது முன்னாள் போராளிகளை மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களையே அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அத்துடன் வடமாரட்சிப் பகுதியில் சுமார் நாற்பது வயதை அண்டிய மூவர் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அவர்களும் கைதுசெய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக. மகிந்த ராஜபக்சவின் கொடுங்கோல் ஆட்சிக்கும் மைத்திரி-ரணிலின் நல்லாட்சிக்கும் பெயர்கள் மாத்திரமே வேறு ஆட்சி ஒன்றே என்பதை இதைவிட அழகாக எடுத்துரைக்க முடியாது. மகிந்த ராஜபக்வின் ஆட்சிக் காலத்தில் கோத்தபாய ராஜபக்ச வெள்ளைவான்களில் கடத்திவிட்டு பின்னர் அவர்கள் கைதுசெய்வதாக அறிவிப்பார்கள். அதேபாணியைத்தான் மைத்திரியும் ரணிலும் பின் பற்றி நல்லாட்சி என்ற ஆட்சி ஒன்றைப் புரிகின்றனர்.

தமிழ் மக்களுக்குஉரிமையைக் கொடுக்கிறோம், நிலத்தைக் கொடுக்கிறோம்,என்று சொல்லி வெளிநாடுகளுக்கு வேடிக்கை காட்டியது ஸ்ரீலங்கா அரசு. ஸ்ரீலங்காவில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் உலகில் உள்ள சட்டங்களில் கொடிய சட்டம் என்றும் அதனை நீக்கபோவதாகவும் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் பேசினார். ஐ.நாவில் பேசினார்.

ஆனால் இன்றைக்குஎந்த சட்டத்தின் பெயரால் தமிழ் ஈழ மண்ணில் கைதுகள் இடம்பெறுகின்றன. அவசரகாலச் சட்டம் அல்லது பயங்கரவாத தடைச்சட்டம்என்ற சட்டத்தின் பெயரால்தான் கைதுகள் நடக்கின்றன. ஸ்ரீலங்காவின் புதிய அரசும் ஸ்ரீலங்காவை காலம் காலமாக ஆட்சி செய்த அரசுகளில் ஒன்றே. தற்கொலை அங்கி மீட்பிலும் வெடிபொருள்மீட்பிலும் மகிந்த தரப்புக்கு தொடர்புள்ளது என்று இந்த அரசுதெரிவித்தது.

ஆனால் இன்றைக்கு அந்த தற்கொலை அங்கியையும் வெடிபொருட்களையும் வைத்து அப்பாவி முன்னாள் போராளிகளையும் அப்பாவி தமிழ் மக்களையும் கைதுசெய்கிறது.மகிந்தவின் ஆட்கள்செய்த செயலுக்காக எதற்கு முன்னாள் போராளிகளை கைதுசெய்ய வேண்டும். ஆக, காலம் காலமாக தமிழ் மக்களை ஒடுக்கிய கொடிய சட்டங்களை வைத்து தொடர்ந்தும் அந்த ஒடுக்குமுறையை செய்வதே ஸ்ரீலங்கா அரசின் நோக்கமாகும்.

மகிந்த ராஜபக்சவுக்காகவும், தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்தவும் ஸ்ரீலங்கா அரசு அப்பாவி முன்னாள் போராளிகளை கைதுசெய்கிறது. புலி… புலி… என்று மகிந்த ராஜபக்ச செய்யும் இழிவரசியலுக்கும் இப்போது ரணிலும் மைத்திரியும் செய்யும் இழிவரசியலுக்கும் என்ன வித்தியாசம்? மகிந்தவின் ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லையோ, அதைப்போலவே இதுவும்.

உண்மையில் இது நல்ல ஆட்சிதான். இது நல்ல அரசுதான். நாங்கள் ஒழுங்காக இருந்திருந்தால் வடக்கில் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியிருக்க மாட்டார்கள், பிரபாகரனை நாம்தான் உருவாக்கினோம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இப்போது அப்பாவி இளைஞர்களை கடத்துகிறது. கடத்தி விட்டு கைது செய்ததாக சொல்கிறது. நல்லாட்சி அரசு நன்றாகவே காய் நகர்த்துகிறது.

இவ்வளவு விடயங்கள் நடந்தேறியும் “நக்குண்டார் நாவிழந்தார்“ என்பதைப் போல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பம்மிக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த காலத்தில் மகிந்தவின் ஆட்சியில் ஒட்டி நின்று நலன்சுவைத்தவர்களைப் போல இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது பதவிகளையும் கதிரைகளையும் நலன்களையும் இறுகப் பிடித்துள்ளனர்.

ஆட்சிகள் மாறியும், பதவிகள் ஏற்றும் தமிழ் ஈழ மக்கள் நம்மதியாக இருக்க முடியாது என்பதை சுமார் ஒரு வருடத்திலான நல்லாட்சி இந்த உலகத்திற்கு தெளிவுபடுத்திவிட்டது. ஸ்ரீலங்கா அரசு தமிழ் ஈழ மக்களை எப்போது வேண்டுமானாலும் எந்த சட்டத்தின் பெயரிலும் கைது செய்து ஒடுக்கி அழிக்கும் என்பதை நல்லாட்சியின்கொடூர முகம் நன்கு எடுத்துரைக்கிறது.