Breaking News

மஹிந்தவை கொல்ல புலி ஆதரவு குழுக்கள் திட்டம்! பீதியில் பந்துல

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்தது போன்று விடுதலை புலிகளின் ஆதரவு குழுக்கள் மஹிந்த ராஜபக்ஷவை குறி வைத்து காத்திருப்பதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன , ரணில் – மைத்திரியின் தற்போதைய அரசாங்கம் நல்லாட்சியா? அல்லது பேயாட்சியா ? என்று தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள என் . எம் . பெரேரா நிலையத்தில் கூட்டு எதிர்க் கட்சியின் ஊடக சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இங்கு தொடர்ந்தும் தெளிவுப்படுத்துகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை மே தினத்திற்கு பின்னர் குறைக்கவும் இராணுவத்தை அகற்றவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கூட்டு எதிர் கட்சி என்ற வகையில் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். நாட்டின் ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளை போன்று மஹிந்த ராஜபக்ஷவை கணிக்க முடியாது. 30 ஆண்டு கால பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து முழுமையாக இல்லாதொழித்தார். இது ஜே.ஆர்.ஜயவர்தனவிற்கோ , சந்திக்காவிற்கோ அல்லது ரணில் விக்ரமசிங்கவிற்கோ செய்ய முடியாமல் போன விடயம் . இந்நிலையில் தப்பித்து வெளிநாடுகளில் தஞ்மடைந்துள்ள புலிகளும் புலி ஆதரவாளர்களும் மஹிந்த ராஜபக்ஷவை பழிவாங்குவதற்காக காத்திருக்கின்றனர்.