Breaking News

யாழில் சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தின நிகழ்வுகள்



சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தின நிகழ்வுகள் நாளை (வியாழக்கிழமை) யாழில் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில் ‘சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி’ என்னும் தொனிப்பொருளிலான பேரணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பேரணியானது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், யாழ். 3 ஆம் குறுக்குத் தெரு வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தின் முன்பாக நாளை காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி வேம்படி வீதி வழியாக யாழ்.பொலிஸ் நிலையத்தினை கடந்து, வைத்தியசாலை வீதி வழியாக காங்கேசன்துறை வீதியை சென்றடைந்து அங்கிருந்து, முற்றவெளியில் நிறைவடையவுள்ளது.

அங்கு சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி எனும் தொனிப்பொருளில் நாடக நிகழ்வுகளும், கருத்துரைகளும் இடம்பெறவுள்ளன.

இந்த நிகழ்வில், சித்திரவதையினை எதிர்க்கின்ற சகலரும் கலந்துகொள்ள வேண்டியதுடன், மதத்தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், பொலிஸார், அரசியல்வாதிகள், தனியார் நிறுவனங்கள், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.