Breaking News

2018ஆம் ஆண்டுக்குள் படையினர் வசமுள்ள காணிகள் ஒப்படைக்கப்படும் – மங்கள



வடக்கில் சிறிலங்கா படையினர் வசம் உள்ள பொதுமக்களின் காணிகள் அனைத்தும், எதிர்வரும் 2018ஆம் ஆண்டு இறுதிக்குள் கையளிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் உறுதியளித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நேற்று உரையாற்றிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த உறுதிமொழியை வழங்கினார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், சிறிலங்கா தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்த பின்னர், பதிலளித்து உரையாற்றிய போதே, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் இந்த வாக்குறுதியை அளித்தார்.

“கடந்தவாரம் சிறிலங்கா இராணுவம் 701 ஏக்கர் நிலத்தை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திடம் கையளித்தது. இதில், 201.3 ஏக்கர் நிலம், கடந்த ஜூன் 25ஆம் நாள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

சிறிலங்கா இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் அனைத்தையும், எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்துக்கு அரசாங்கம் தெளிவாக கூறியுள்ளது.

தேசிய பாதுகாப்பு மற்றும், அபிவிருத்திப் பயன்பாடுகளுக்குத் தேவையான, காணிகளின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.