Breaking News

வெள்ளைவான் கடத்தல்கள் ஆவணங்கள் திருட்டு



வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல்கள் குறித்து சாட்சியமளித்திருந்த லெப்.கொமாண்டர் கே.சி.வெலகெதரவுடன் தொடர்புடைய ஆவணங்களே காணாமற்போயுள்ளன.

திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்த ஆவணங்கள் மார்ச் 29ஆம் நாள் திருடப்பட்டுள்ளன.

ஆட்கடத்தல்கள், கடத்தல்கள், ஆயுதக்கடத்தல்களுக்கும் அரசியல்வாதிகள் மற்றும் கடற்படை அதிகாரிகளுக்கும் இடையில் உள்ள தொடர்புகளை வெளிப்படுத்தக் கூடிய ஆவணங்களே திருடப்பட்டுள்ளன.

கடத்தல்கள் தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலமாக அளித்திருந்த லெப்.கொமாண்டர் கே.சி.வெலகெதரவுக்கு கடற்படை உயர் மட்டத்தில் இருந்து கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

அத்துடன், விடுமுறை பெறாமல் வெளிநாடு சென்றதாக குற்றம்சாட்டப்பட்டு இராணுவ நீதிமன்றினால், தண்டிக்கப்பட்டார்.

இராணுவ விசாரணை நீதிமன்றினால் பதவி இறக்கம் செய்யப்பட்ட தீர்ப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ரத்துச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.