Breaking News

புலிகளின் காலத்தில் சந்தோசமாக இருந்தோம்” - சிங்கள விவசாயி

தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தாம் சந்தோசமாக இருந்ததுடன், சுதந்திரமாக தமது மீன்பிடி மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவித்துள்ள அம்பாறை மாவட்டத்தின் பாணம பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள மக்கள், எனினும் தற்போது அந்த சந்தோசமும், சுதந்திரமும் பறிக்கப்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.


உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தால் படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள பாணம மக்களின் காணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் போதே பாணம பகுதியைச் சேர்ந்த சிங்கள் மக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் பாணம பகுதியில் காணிகளை இழந்து தவிக்கும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கள ஆய்வுகளை நடத்தியுள்ளனர்.

இதன்போது நல்லாட்சி அரசாங்கத்திலும் தாம் அனைத்தையும் இழந்து தமது காணிகள் அபகரிக்கப்பட்ட நிலையில் சுதந்திரம் மறுக்கப்பட்டு வாழ்ந்த வருவதாக பாணம சிங்கள மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நெருக்கடிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த பாணம, சாகம்வெல கிராமத்தைச் சேர்ந்த பி.எம் பண்டார என்ற சிங்கள விவசாயி, தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தாங்கள் மகிழ்ச்சியாகவும், சதந்திரமாகவும் இருந்ததாக பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றார்.

பாணம, சாகம்வெல விவசாயி, “தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் நாங்கள் மிகவும் சந்தோசமாக இருந்தோம் எம்மை அவர்கள் எதுவும் செய்யவில்லை. அவர்கள் சாதாரண மக்களின் பிரச்சனைகளை பற்றி நன்கு தெரிந்தவர்கள்.

எங்களுக்கு எங்களது காணிகளில் பயிர் செய்து கடல் தொழில் செய்து அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு அன்று சுதந்திரம் இருந்தது. எமக்கென்று காணிகள் இருந்தன.

தற்போது அதை எமது அரசாங்கம் சூறையாடியுள்ளது. எம்மை கிராமத்தை விட்டு வெளியேற சொன்ன பாதுகாப்பு படையினர் நாம் வெளியேற மறுத்ததுக்கு எமது வீடுகளை எரித்து பலவந்தமாக வெளியேற்றி 6 வருடங்கள் கடந்தும் நாம் எமது சொந்த இடத்துக்கு இன்னும் செல்ல வில்லை.

5 கிராமங்கள் உள்ள இந்த இடத்தில் 1000 ஏக்கருக்கு மேல் கடல் பகுதியை ஸ்ரீலங்கா படையினர் தங்கள் வசம் வைத்துள்ளனர். இதில் அவர்கள் சுற்றுலா துறையை பலப்படுத்தி வருகின்றனர். எமது கடற்கரை நிலம் எமக்கு சொந்தம் இல்லை என்ன அபிவிருத்தி இது? யாருக்கு நல்லாட்சி. எம்மை எமது காணிகளிலிருந்த வெளியேற்றி அதிகாரத்தில் உள்ளவர்கள் இலாபம் அடைகின்றனர்.

எமது கடல் பகுதியில் அலைகள் அதிகமாக உள்ளதால் கடல் படகு விளையாட்டுக்கு மிகவும் உகந்த கடலாக உள்ளது இதனால் தான் எமது நிலங்களை சூறையாடி உள்ளனர். இந்த காணி விடயத்தில் பிரதேச செயலகமும் அமைச்சர் தயா கமகேயும் எங்களுக்கு எதிராக உள்ளனர் குறிப்பாக இந்த காணிகளை அபகரிக்கும் எண்ணம் அமைச்சர் தயா கமகேக்கும் உள்ளது. வெளியிடங்களில் இருந்து மக்களை கொண்டு வந்து அவர்களுக்கு காணிகளை விற்றுவிட்டு பிரச்சனை தீர்ந்து விட்டது என கூறுகின்றார். ஆனால் நாங்கள் பாதையில் நிற்கின்றோம்.

நாங்கள் வாக்களிக்கும் போது முதல் விடயமாக எமது பிரச்சனையை பாராளுமன்றத்தில் கதைப்பதாக கூறினார். ஆனால் இன்று வரைக்கும் எம்மை திரும்பி பார்க்க வில்லை. பல ஆர்ப்பாட்டங்கள் விழிப்புணர்வுகள் உயிர் இழப்புகள் இதுவரை தியாகம் செய்துள்ளோம் எமது உயிர் போனாலும் தொடர்ந்து போராட நாம் தயாராக உள்ளோம்.

இந்த காணி தொடர்பாக நாம் பல வழக்குகள் தொடுத்துள்ளோம். அதில் நாம் வெற்றி கண்டுள்ளோம் ஆனாலும் எம்மால் எமது காணிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நீதித்துறைக்கு கூட இப்போது மதிப்பில்லாமல் போயுள்ளது, காரணம் நாம் சாதாரண மக்கள் என்பதாலா? முன்னைய அரசை வீட்டுக்கு அனுப்பினோம். ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கமும் எம்மை கை விட்டு விட்டது என தெரிவித்தார்.