Breaking News

விக்கினேஸ்வரனை பதவியிலிருந்து நீக்க முடியுமாம்..?

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் நடத்திய பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்ப்பு என்றால் சம்பந்தன் ஏன் விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை?


வடக்கு மாகாண சபையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து அவரைப் பதவியில் இருந்து நீக்கமுடியும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வைத் தேடும் முயற்சி இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

‘எழுக தமிழ்’ என்ற தேவையற்ற நிகழ்ச்சியை நடத்தி அவர் தெற்கில் ஒரு அலையை ஏற்படுத்தியுள்ளார். தெற்கில் உள்ள இனவாதிகளுக்கு அவர் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளார். வடக்கிலும் தெற்கிலும் இந்த இனவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும்.

‘எழுக தமிழ்’ பேரணி உடனடியாக நடத்தப்பட்டது அல்ல. இதையொட்டிய பல நிகழ்வுகள் ஒரு மாதமாக இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்தே ‘எழுக தமிழ்’ நடத்தப்பட்டது.

விக்னேஸ்வரனின் இந்தச் செயற்பாடு இனங்களிடையே குரோதத்தை விதைக்கும் இனவாத செயற்பாடாகவே உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் இதை எதிர்க்கின்றார்.

அப்படியென்றால் அவரது கட்சி சார்பில் விக்னேஸ்வரனால் எப்படி முதலமைச்சராக இருக்க முடியும்? வடக்கு மாகாண சபையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து அவரை முதலமைச்சர் பதிவில் இருந்து கவிழ்க்க முடியும்.

அரசு இவ்வாறான இனவாத செயற்பாடுகளை முறியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒபாமாவையும் பான் கீ – மூனையும் திருப்திப்படுத்தினால் இனவாதம் ஒளிந்துவிடாது.

இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால் மட்டுமே இனவாதத்தை அழிக்க முடியும். அதைச் செய்வதற்கு அரசு முன்வர வேண்டும்.

தெற்கிலோ வடக்கிலோ இனவாதம் எங்கு தலைதூக்கினாலும் அது அடியோடு அழிக்கப்பட வேண்டும். இதற்காக மக்கள் ஒன்றிணைய வேண்டும்” – என்றார்.