தமிழ்ப் பிரதேசத்தில் திடீரென முளைத்த புத்தர் சிலை! (படங்கள்) - THAMILKINGDOM தமிழ்ப் பிரதேசத்தில் திடீரென முளைத்த புத்தர் சிலை! (படங்கள்) - THAMILKINGDOM
 • Latest News

  தமிழ்ப் பிரதேசத்தில் திடீரென முளைத்த புத்தர் சிலை! (படங்கள்)  அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியில், இன்று (சனிக்கிழமை) புதிதாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளமை அப்பகுதி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பாரிய விசனத்திற்கு உள்ளாகியுள்ளது.

  தமிழ் மக்கள் வாழும், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியிலுள்ள மாயக்கல்லி மலையிலேயே இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

  அம்பாறையிலிருந்து பௌத்த மதகுருமார்களுடன் பெருமளவான வாகனங்களில் வந்தவர்கள், குறித்த பகுதியில் புத்தர் சிலையொன்றினை வைத்துச் சென்றுள்ளனர்.

  இதன்போது மாணிக்கமடு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், தங்களுக்கு இலங்கையின் எப்பகுதியிலும் புத்தர் சிலைகளை நிறுவுவதற்கு அதிகாரம் உள்ளது என, சிலையை வைத்தவர்கள் கூறிச் சென்றுள்ளனர்.

  அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் கிராமங்களின் எல்லைகளை ஆக்கிரமிப்புச் செய்யும் வகையில், இவ்வாறான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  இந்நிலையில் தற்போது இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிக்குப்பட்ட பகுதியில், இன்று புதிதாக புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளது.

  இவ்விவகாரம் தொடர்பில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டுமென இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இவ்விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை பிரதிநிதிகளுக்கு தொலைபேசி மூலமாக அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை எவரும் களத்துக்குச் சென்று நிலைமையினை ஆராயவில்லை எனக் கூறப்படுகிறது.  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தமிழ்ப் பிரதேசத்தில் திடீரென முளைத்த புத்தர் சிலை! (படங்கள்) Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top