Breaking News

இலங்கையில் ஆட்சி மாறினாலும் வெள்ளைவான் கடத்தல் தொடர்கிறது – ஐ.நா குழு



சிறிலங்காவில் கடந்த ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த போதிலும், வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்கின்றன என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் துணைத் தலைவர் பெலிஸ் காயர் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடந்து வரும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 59ஆவது கூட்டத்தொடரிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘கடந்த ஆண்டிலும் வெள்ளை வான் கடத்தல்கள் இடம்பெற்றிருப்பதாக அரசசார்பற்ற நிறுவனங்கள், சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவுக்கு முறையிட்டுள்ளன .

2012 தொடக்கம் 2016 ஒக்ரோபர் வரையான காலப்பகுதியில், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போர் சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறையினருக்கு எதிராக 100க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன ‘ என்றும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் துணைத் தலைவர் பெலிஸ் காயர் தெரிவித்துள்ளார்.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 59ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான மீளாய்வு நேற்று ஆரம்பமானது. இன்று இந்த மீளாய்வு தொடரவுள்ளது.