Breaking News

வடக்கு மாகாண சபை அமர்வில் முதல்வரை கேள்விக்குட்படுத்த திட்டம்

வடக்கு மாகாண சபையின் 83 ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியிலுள்ள வட மாகாண சபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


இன்றைய அமர்வில் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் தொடர்பிலும் கனேடிய நகரங்களை முல்லைத்தீவு மற்றும் வவுனியாவுடன் இணைக்கும் உடன்படிக்கை தொடர்பிலும் கேள்விகள் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட தகவல்கள் குறித்து அவரிடம் வினவப்படவுள்ளது.

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை , மீள்குடியேறவுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை மற்றும் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களின் காணிகள் தொடர்பிலும் வட மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தின் மார்க்கம் மற்றும் பிறம்ரன் நகரங்களை, முறையே முல்லைத்தீவு, வவுனியா நகரங்களுடன் இணைக்கும் உடன்படிக்கை தொடர்பில் வட மாகாண அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா முதலமைச்சரிடம் வினவ உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் முதலமைச்சரின் கனேடிய விஜயத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பவுள்ள வட மாகாண சபை எதிர்கட்சித் தலைவர், நகர இணைப்பு உடன்படிக்கை வரைபு அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டதா எனவும் வினவ உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.