Breaking News

தீர்வைக் கண்டு அஞ்சுபவர்களின் சதியே கொலை முயற்சி – சுமந்திரன்!



புதிய அரசியல் யாப்பினூடாக தேசிய பிரச்சனைக்குத் தீர்வு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த இனவாத சக்திகளே தன்னைக் கொல்வதற்குச் சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் தினம், இந்திய ஊடமான இந்து நாளிதழ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொல்லத் திட்டம்தீட்டப்பட்டிருந்த சதித்திட்டமொன்று முறியடிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது.

அத்துடன், தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பது தொடர்பாக சிறீலங்காப் பிரதமர் அலுவலகத்தில் இருந்து, இந்த மாத முற்பகுதியில் சுமந்திரனுக்குத் தகவல் எச்சரிக்கை அனுப்பப்பட்டிருந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக அவர் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவிக்கையில்,

“காவல்துறையினர் சொன்ன விடயங்களே எனக்குத் தெரியும், 23ஆம் திகதி காவல்துறையினர் எனக்கு தகவல் தெரிவித்தார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் எனக்கு அச்சுறுத்தல் காணப்படுவதை உறுதிப்படுத்துவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்”. எனக் குறிப்பிட்டார்.

இதனிடையே சிறீலங்காப் பிரதமர் அலுவலகம் தனக்கு இது தொடர்பில் அறிவித்ததாகவும் குறிப்பிடும் அவர் “எதற்காக என்னை கொலை செய்ய திட்டமிட்டார்கள் என எனக்குத் தெரியாது. யார் இவர்களை இயக்குகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. வெளிநாட்டு சக்திகளோ தெரியாது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”. எனவும் குறிப்பிட்டார்.

உயர்மட்டப் புலனாய்வு அறிக்கைகளுக்கு அமைய இதுதொடர்பாக முன்னாள் பேராளிகள் மூன்று பேரை பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையான தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத சட்டத்தரணி ஒருவர், கிளைமோர்கள் மற்றும் டெட்டனேற்றர்களை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.

எனினும் கைது செய்யப்பட்வர்களில் ஒருவரின் தாயார் கருத்து வெளியிடுகையில் “தனது பிள்ளை கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டதாகவும், எனினும் இவ்வாறான பாரதூரமான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது” எனவும் குறிப்பிட்டார்.