Breaking News

போர்க்குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் – சரத் பொன்சேகா



போர்க்குற்றங்களை இழைத்த சிறிலங்கா படையினருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும், பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கண்டியில், மல்வத்தை பீடாதிபதியைச் சந்தித்துப் பேசிய பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“நுகேகொடவில் நடந்த மகிந்த ராஜபக்சவின் பேரணியில் ஊழல் செய்தவர்களும், குடிகாரர்களுமே பங்கேற்றனர். இந்த மேடையில் ஏறிய கருணாவும் அத்தகையவர் தான்.

புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இருந்த கருணா பலரைக் கொன்றவர். பின்னர் முன்னைய அரசாங்கத்துடன் இணைந்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திலேயே ஊழல் மோசடி செய்து விட்டு பிரபாகரனிடம் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தப்பியோடி வந்தவர் தான் அவர்.

பிரபாகரனின் இருப்பிடத்தைக் கூட அவரால் சொல்ல முடியவில்லை. அத்தகையவரை வீரனாக்கியது மகிந்த ராஜபக்ச தான்.

போர்க்குற்றங்களை இழைத்த எவரானாலும் அவர் தண்டிக்கப்பட வேண்டும். சிறிலங்கா இராணுவத்துக்குள் கறுப்பு ஆடுகள் இருக்கலாம். எத்தகைய ஒரு அமைப்புக்குள்ளேயும் இத்தகைய சக்திகள் இருப்பது வழக்கமே.

போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.