Breaking News

இலங்கை விரும்பும் போது எட்காவில் கையெழுத்திடலாம் – இந்தியத் தூதுவர்



இந்தியாவுடன் எட்கா உள்ளிட்ட எந்த உடன்பாட்டிலும், தாம் விரும்பும் போது சிறிலங்கா கையெழுத்திடலாம் என்றும், இந்த விடயத்தில் இந்தியா அழுத்தங்களைக் கொடுக்காது என்றும், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 68 ஆவது குடியரசு நாளை முன்னிட்டு, கடந்த வியாழக்கிழமை இரவு இந்தியா இல்லத்தில் நடந்த வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“முன்மொழியப்பட்டுள்ள எட்கா உடன்பாடு அல்லது வேறு எதனையும், சிறிலங்கா மீது திணிக்கும் எண்ணம் இந்தியாவுக்குக் கிடையாது.

சிறிலங்கா தனக்கு தேவைப்படும் போது, வசதியான வேகத்தில் இதனை இறுதிப்படுத்திக் கொள்ள முடியும். நாம் அதற்கு இணங்கத் தயார். எமது தொழில்நுட்ப முன்னேற்றங்களை உங்களின் அபிவிருத்தியின் முன்னேற்றங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிறிலங்காவின் 60 வீத ஏற்றுமதி, இந்திய- சிறிலங்கா சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் கீழான, சலுகைகளைப் பெறுகின்றது. சிறிலங்காவில் சக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் துறையில் பல இந்தியா முதலீடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

2.6 பில்லியன் டொலரை சிறிலங்காவுக்கு இந்தியா உதவியாக வழங்கியுள்ளது. இதில், 435 மில்லியன் டொலர் கொடையாக வழங்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.