Breaking News

வெளிநாட்டு நீதிபதிகள் பரிந்துரையை நீக்கும் சிறிலங்காவின் முயற்சி தோல்வி



ஜெனிவா தீர்மானத்தில் இருந்து, வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய பரிந்துரையில் திருத்தம் செய்வதற்கு அல்லது நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத்தொடுனர்களை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில், 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழமையாக நடைமுறைப்படுத்துவதற்கு காலஅவகாசம் அளிக்கும் வகையில், தொடர்ச்சித் தீர்மான வரைவு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மான வரைவில், வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத் தொடுனர்கள் பற்றிய பரிந்துரையை நீக்குவதற்கு அல்லது திருத்தம் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

இது தொடர்பாக கொழும்பிலும், ஜெனிவாவிலும் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தன. எனினும் இந்த முயற்சிகள் பயனளிக்கவில்லை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.