Breaking News

வடக்கு, கிழக்கில் உலகத் தரம்வாய்ந்த மூன்று வீதிகளை அமைக்க இந்தியா இணக்கம்



சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உலகத் தரம்வாய்ந்த வீதி உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவின் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நடத்திய பேச்சுக்களின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுக்களின் போது, மூன்று பிரதான வீதி அமைப்புகளை அபிவிருத்தி செய்து தருமாறு இந்திய அரசாங்கத்திடம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்ததாக, இந்தியாவின் நெடுஞ்சாலைகள் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம்- மன்னார், மன்னார்- வவுனியா, தம்புள்ள- திருகோணமலை வீதிகளையே அபிவிருத்தி செய்து தருமாறு இந்தியாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளார்.

எனினும், உள்ளூர் அனுமதி மற்றும் காணிகள் சுவீகரிப்பு போன்றவற்றை உள்ளீர் முகவர் அமைப்புகள் பொறுப்பேற்றுக் கொண்டால் மாத்திரமே இது சாத்தியமாகும் என்றும், காணிகள் சுவீகரிப்பு மற்றும் ஏனைய அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளாமல், இந்த திட்டத்தை உரிய காலத்தில் நிறைவேற்றுவது கடினம் என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்த வீதிகள் அமைப்புக்கான நிதி தொடர்பாகவும் நேற்றைய சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அனைத்துலக ஆலோசகரை நியமிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், இறுதியான திட்ட அறிக்கையைப் பெற்றுக்கொண்டு இந்திய அரசாங்கம் இதனை முன்னெடுக்கும் என்றும் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா- சிறிலங்கா இடையிலான உறவுகளை வலுப்படுத்தும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்துக்கு தமது அமைச்சு முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.