Breaking News

தமிழ் மக்கள் நடத்தும் போராட்டத்துக்கு உதவுங்கள்

வடக்கு கிழக்கு எங்கும் தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.காணாமல் போனவர்களின் உறவுகள் மற்றும் நில மீட்புத் தொடர்பான போராட்டங்களாக இவை நீண்டு செல்கின்றன.

இந்நிலையில் தமிழ் மக்கள் நடத்தும் இப் போராட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது நீதியான கோரிக்கையாகும்.

அதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள், அவர்களுக்கான உதவிகளை வழங்குவதில் தமிழ் மக்கள் தங்கள் பூரண வகிபங்கை ஆற்ற வேண்டும் என தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் அதன் இணைத் தலைவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்த கோரிக்கை நியாயமானது. காலத்தின் தேவையுமானது. காணாமல் போனவர்கள் தங்கள் சொந்த அலுவல் சார்ந்து காணாமல் போகவில்லை. தமிழின அழிப்பின் நாசகார சக்திகளால் அந்தக் கொடூரம் நடந்துள்ளது.

எனவே காணாமல்போனவர்கள் தொடர்பில் நாம் பார்வையாளர்களாக இருப்பது பாவ காரியமாகும்.என்னுடைய பிள்ளைகளுக்கு, என் உறவுகளுக்கு இக்கதி நடந்திருந்தால் நான் எங்ஙனம் துடிதுடித்துப் போவேனோ அதுபோல மற்றவர் துன்பத்தையும் கண்டு பதைபதைப்பவனே உண்மையான மனிதனாக இருக்க முடியும்.

எனவே எங்கள் உறவுகள், அயலவர்கள், எங்கள் சகோதரர்கள் நடத்துகின்ற தொடர் போராட்டங்களை அவர்களுடையதாக ஆக்காமல், நாங்களும் அவர்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும்.

இதேவேளை காணாமல்போனவர்களின் உறவுகள், நிலமீட்பில் ஈடுபட்டுள்ள மக்கள் தம்மளவில் அமைப்புக்களை உருவாக்கி கூடிக்கதைத்து தீர்மானங்களை நிறைவேற்றி அதன்படி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்களின் இந்த ஒழுங்குமுறையான போராட்டத்துக்கு யாரும் ஊறு செய்து விடக் கூடாது என்பது நம் தாழ்மையான கோரிக்கை.அதேவேளை போராட்டங்களை விஸ்தரித்தல் அல்லது தாயகம் முழுவதிலும் ஒரு முழுமையான போராட்டத்தை முன்னெடுத்தல் என்ற விடயத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் - அந்த மக்கள் சார்ந்த அமைப்புக்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுடன் அவர்களின் ஏற்பாட்டை யும் அறிதல் அவசியம்.

அதேநேரம் எங்கள் உறவுகள் நடத்துகின்ற நியாயமான போராட்டத்துக்கு தென்பகுதியில் இருக்கக்கூடிய மனிதநேய அமைப்புக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும் என்பதுடன்,

இத்தகையவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நேரில் வந்து தொடர் போராட்டம் நடத்தும் மக்களுடன் இணைந்து தமது ஆதரவைத் தெரிவிப்பது போராட்ட வெற்றிக்கு உந்து சக்தியாக இருக்கும்.

இத்தகைய ஆதரவுகள் இடையிடையே இடம்பெற்றாலும் அவை அதிகரிக்க வேண்டும் என்பதுடன் இந்த ஆதரவுகள் தென்பகுதியில் வெளிப்படுத்தப்படுமாயின் அது போராட்டம் நடத்தும் மக்களுக்கு பெரும் துணையாகும்.