Breaking News

தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் விடயத்தில் அரசாங்கம் யாருக்கும் அடிபணியாது: மங்கள

தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் விடயத்தில் அரசாங்கம் யாருக்குமே அடிபணியப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வெளிநாட்டுத் தலையீட்டைத் தமிழ்த் தலைமைகள் சிலர் கோரி வருகின்றபோதும் அவ்வாறான தேவை இல்லாமல் உள்ளக ரீதியிலேயே தீர்வை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கின்றோமா இல்லையா என்பது இப்போதைய பிரச்சினை அல்ல. தமிழர்களுக்கு விரைவில் நீதியைப் பெற்றுக் கொடுப்பதுவே இப்போதுள்ள முக்கிய பிரச்சினை.

இப்போது நீதித்துறை அரசியல் தலையீடு இன்றிச் சுதந்திரமாக இயங்கத் தொடங்கிவிட்டது. எதிர்காலத்தில் கடந்த கால ஆட்சியைப் போன்ற மோசமான நிலைமை ஏற்படாது. தெற்கோ வடக்கோ எல்லோரும் இந்த நாட்டு மக்கள். அவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பது அவசியமாகும்.

அதைத்தான் நாம் செய்ய முற்படுகின்றோம். இந்த அரசுமீது நம்பிக்கை இழந்துள்ள வடக்கு-கிழக்குத் தமிழர்களின் நம்பிக்கையை இதன்மூலம் வென்றெடுப்போம். அனைத்து தமிழருக்கும் நீதி கிடைக்கும்” என அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.