Breaking News

காணிப்பிரச்சினைக்கு இரு வாரங்களில் தீர்வு! – செல்வம் அடைக்கலநாதன்



முள்ளிக்குளம் மற்றும் கேப்பாப்பிலவு மக்களின் காணிப் பிரச்சினைக்கு இரண்டு அல்லது நான்கு வாரங்களில் தீர்வு வழங்கப்படும் என்ற உத்தரவாதம் அரச தரப்பால் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு சம்பந்தமாக நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விஷேட கூட்டம் தொடர்பில், ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இக் கூட்டத்தின் போது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் மக்களுக்கு நியாமான தீர்வு வழங்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகவும் கேப்பாப்பிலவு காணிகளை விடுவிப்பதற்கு 50 இலட்சம் ரூபாய் கிடைக்கப்பெற்றால் அதனை தாங்கள் விடுவிப்போம் என இராணுவத்தினர் தெரிவித்ததாகவும் செல்வம் அடைக்கநாதன் மேலும் கூறினார்.

இதனையடுத்து, குறித்த நிதியை அமைச்சர் சுவாமிநாதன் தனது அமைச்சின் ஊடாக பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாகவும் நிதி கிடைக்கும் பட்சத்தில் காணிகள், இரண்டு அல்லது நான்கு வாரங்களில் விடுவிக்கப்படும் என உறுதியளித்ததாகவும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.