Breaking News

முல்லைத்தீவில் 27 ஆம் திகதி பூரண கர்த்தாலுக்கு அழைப்பு



வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளகடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆதரவு வழங்கியுள்ளது. 

நீலமீட்பு போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, எதிர்வரும் 27 ஆம் திகதி வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்து, கடந்த 49 நாளாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு போராட்டம் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று 56 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் நடைபெறும் பகுதியில் இன்று ஒன்றுகூடிய அரசியல் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர். 

எதிர்வரும் 27 ஆம் திகதி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக முல்லைத்தீவிலும் போராட்டமொன்றை நிகழ்த்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாதெரிவித்துள்ளார்.

போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அரசினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்க்கும் முகமாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி தங்கள் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு ஈபிஆர்எல்எப் ஆதரவு வழங்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமானசுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 27 ஆம் திகதி அனைத்துக் கடைகளிலும் கறுப்பு கொடியை பறக்கவிட்டு ஆதரவு வழங்கவுள்ளதாக வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே. இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

அம்பாறை கல்முனை மாணவர் மீட்பு பேரவை கடையடைப்பிற்கு முழு ஆதரவையும் வழங்கவுள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் இதுதொடர்பாக இன்னும் பல அமைப்புக்களுடன் தாங்கள் உரையாடவுள்ளதாகவும் அந்த அமைப்பின் தலைவரும் பொறியியலாளருமான கணேஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விரைவில் விடுவிக்குமாறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.