Breaking News

திருகோணமலை தான் இன்றைய பேச்சுகளின் முக்கிய இலக்கு – இந்திய ஊடகங்கள் தகவல்



சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று நடக்கவுள்ள பேச்சுக்களின் போது திருகோணமலை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய எண்ணெய் நிறுவனத்தின் பாரிய எண்ணெய்க் களஞ்சியம் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம் இந்தியாவுக்கு முக்கியமானது. இந்தியாவுடன் இணைந்து கூட்டாக திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அனுமதிக்கக் கூடும்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா அபிவிருத்தி செய்யவுள்ள நிலையில், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதிலும் புதுடெல்லி அக்கறை கொண்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவின் மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோருடன் சிறிலங்கா பிரதமர் நடத்தவுள்ள பேச்சுக்களில், துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் விடயத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சீனாவின் நிழல் பரவத் தொடங்கியுள்ளதால் சீனக்குடாவில் மீண்டும் இந்தியா நுழைகிறது என்ற தலைப்பில் தி ஹிந்து ஆங்கில நாளிதழில் நிருபமா சுப்பிரமணியன் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

இந்தக் கட்டுரையில் துறைமுகங்களை அமைப்பதற்குத் தேவையான நிதி இந்தியாவிடம் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக கூட, இந்தியா 2011ஆம் ஆண்டு தொடக்கம் வெறும் பேச்சுக்களை மாத்திரமே நடத்திக் கொண்டிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.