Breaking News

முள்ளிவாய்க்கால் இளைஞர்களின் எழிச்சி-ஒடித்திரியும் தமிழரசு தலைமை(பாகம்-1)

 "இனி இது இரகசியம் அல்ல' பத்தியின் முழுவிவரம் வாசகர்களுக்காக இங்கு பதிவிடப்படுகிறது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளும், கடந்த வெள்ளியன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒட்டி யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் கொடுத்த அரசியல் பேதியும் பல தமிழ்க் கட்சிகளுக்கும் நன்றாகத்தான் வேலையைக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன போலும்.

குறிப்பாகத் தமிழ்க் கூட்டமைப்புக்கு இரண்டு விடயங்களுமே - தேர்தல் முடிவும், பல்கலை மாணவர் நடத்தையும் - நல்ல பேதிக் குளிசைகளாய்த் தான் போய் வேலைகளைக் கொடுத்திருக்கின்றன போலும்.

இளைஞர் சமுதாயம் விலகிப்போய் எதிர்ப்பதன் விளைவை தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருந்து, எண்பதுகளில் ஆரம்பத்தில் இருந்தே அனுபவித்தவர்கள் தமிழ்த் தலைவர்கள்.

யாழ் வீரகாளியம்மன் கோவில் முன்றிலில் உண்ணாவிரதம் இருந்த தளபதி அமிர்தலிங்கத்துக்கு "துடிப்புள்ள' தமிழ் இளைஞர்கள் பலவந்தமாக சோறு ஊட்ட முற்பட்டதோடு அப்போது உச்சகட்டத்தை அடைந்தது இளைஞர்கள் - கூட்டணி முறுகல்.

அதுபோலவே, அண்ணன் மாவை சேனாதிராசாவுக்கும் ஏனைய கூட்டமைப்பு அரசியல் தலைவர்களுக்கும் - ஜனநாயகப் போராளிகளுக்கும் சேர்த்து - முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் முன்னெடுக்கப்பட்ட வலுக்கட்டாய புறந்தள்ளுதல் நடவடிக்கை அப்படிப்பட்ட ஓர் ஆரம்பமாகவே தெரிகின்றது.

சரித்திரம் திரும்புகின்றதோ என்னவோ...!

ஆனால், இந்தப் போக்கினால் அதிர்ச்சியுற்றிருக்கும் கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியான இலங்கைத் தமிழரசு இதிலிருந்து மீளுவதற் காக சுதாரித்துக்கொள்ள முயல்வது அதன் நடவடிக்கையில் தென்படுகின்றது.

இளைஞர்களைக் கைவிட்டுப் போகாமல் அப்போது தள பதி அமிர்தலிங்கம் என்ன செய்ய முற்பட்டாரோ அதைத் தான் இன்றைய தளபதி மாவை அண்ணரும் செய்ய முற்படுகின்றார்.

அரசியல் போக்கின் தாற்பரியம் உணர்ந்த தமிழரசுக் கட்சியினர் உடனடியாகவே இளைஞர் அணியை சீரமைத்து, உருக்கொடுத்து, வளர்த்தெடுக்கலாம் என்று சிந்திக்கின்றனர். ஆனாலும் அதிலும் அவர்களின் தலைவர்களின் "குறுக்குப்புத்தி' நிமிரவில்லை என்பதுதான் வேதனை.

யாழ் மாவட்ட தமிழரசுக் கட்சியின் கிளைக்கூட்டம் நேற்று முன்தினம் யாழ் மார்ட்டின் வீதி அலுவலகத்தில் பகல் முழுவதும் நடந்தது. வந்திருந்த மூலக்கிளை, வட்டாரக்கிளை, தொகுதிக்கிளை என்று எல்லாவற்றினதும் உறுப்பினர்களும் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் தெரிவு உட்பட்ட விடயங்களில் கட்சித் தலைவர்கள் நடந்து கொண்ட சர்வாதிகாரப் போக்கை வாங்குவாங்கென்று வாங்கித் தள்ளினார்கள்.

மறுகதை கூறாமல், எல்லாவற்றையும் செவிமடுத்த கட்சித் தலைமை, உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் குதித்த குதியன் நிலைப்பாட்டை அடி யோடு கைவிட்டு விட்டு, சாந்தமே உருவாக சரணாகதி நிலைப்பாட்டை எடுத்தது. பாவம், ஏனைய உறுப்பினர்கள் இது பாய்வதற்கான பதுங்கல் என்று தெரியாமல் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தார்கள்.

""நடந்தவை யாவும் தவறு தான். மன்னித்துக் கொள்ளுங்கள்!'' - என்று தலைமை பவ்வியமாக - விநயமாக - எடுத்துரைக்க, எதிர்ப்பு விடயங்கள் எல்லாம் ஒரே "சமாளிபிக் கேசன்' மூலம் மூடி மறைக்கப்பட்டன.

பிரதான விடயமாக இளைஞரணியை மீண்டும் மறுசீரமைத்து முழு அளவில் காத்திரமாக இயக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இதற்குப் பின்னால் பொதிந்து கிடக்கும் சூத்திரம் யாருக்கும் விளங்காமைதான் பிரதான விடயம்.

தளபதி அமிரின் வழியைத் தற்போதைய தளபதி மாவை பின்பற்றுகின்றார் என்று கூறினேன் அல்லவா? அதுதான் விவகாரம். தமிழ் இயக்கங்கள் எல்லாம் கூட்டணிக்கு எதிராகக் கிளம்பிய அன்றைய நிலையில், தளபதி அமிரின் ஆசீர்வாதத்தோடு, அவருக்கு அடக்கமாக இயங்கும் என்ற எதிர்பார்ப்போடு, போட்டிக்கு ஓர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தலைவர் யார் தெரியுமா? தளபதி அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் தான். அந்த இயக்கத்தில், அப்போதைய இளைஞரும், அன்று தளபதி அமிரின் மிகவும் நம்பிக் கைக்குரிய விசுவாசியுமான மாவை சேனாதிராசாவும் கூட அங்கம் வகித்தார் என்று உள்வட்டாரங்களில் பேச்சு உண்டு. துரதிஷ்டவசமாக அன்றைய அந்த இயக்கத்தின் பெயரும், இன்றைய தமிழ்க் கூட்டமைப்பின் பெயர் மாதிரி TNA தான். அது Tamil National Army இது Tamil National Alliance.

எண்பதுகளின் ஆரம்பத்தில் ஒரு நாள், முதல் தொகுதியில் தமிழகத்தில் பயிற்சி பெற்ற சுமார் ஒன்றரை டசின் தமிழ் தேசிய இராணுவத்தின் உறுப்பினர்கள் படகு ஒன்றி மூலம் மன்னாரில் வந்து கரையிறங்கிய கையோடு, பிறிதொரு போராளிகள் குழுக்களினால் வழிமறிக்கப்பட்டமையு டன் அவர்களின் கதை "காணாமல் போனோர்' விவகாரமாயிற்று. அந்தச் சம்பவத்துடன் குறுகிய காலத்தில் "தமிழ் தேசிய இராணுவமும்' காணாமல் போயிற்று.

அது பழைய கதை. இனித் தற்போதைய விடயத்துக்கு வரு வோம்.

தமிழரசுக் கட்சியின் நேற்று முன்தினம் நடைபெற்ற யாழ் மாவட்ட கிளைக் கூட்டத்துக்கு இரண்டொரு நாள்களுக்கு முன்னர், தமிழரசு அலுவலகத்தை நிரந்தரமாக ஆக்கிரமித்திருக்கும் வயோதிபர் படையின் முக்கியஸ்தர் ஒருவர், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்டதும் இணுவிலில் உள்ளதுமான தமது இல்லத்துக்கு தமிழரசுக் கட்சியில் இப்போது "இளைஞர் கள்' போன்று செயற்படும் நடுத்தர வயதுச் செயற்பாட்டாளர்கள் சிலரைக் கூட்டி பூர்வாங்க ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றார்.

இளைஞரணியை எப்படி மறுசீரமைப்பது என்பதுதான் ஆராயப்பட்ட விடயம். அச்சமயம்தான், தமிழரசுத் தலைமையின் திட்டத்தை நாசூக் காக அவர் அவிழ்த்து விட்டிருக் கின்றார். அதாவது, இளைஞரணியை மறுசீரமைக்கும் இணைப்பாளர் பொறுப்பு இப்போது வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உறுப்பினரும் தளபதி மாவை சேனாதிராசாவின் மகனுமான கலையமுதனுக்கு வழங்கப்படுகின்றது என்ற விடயத்தை அவர் போட்டு உடைத்திருக்கின்றார். 

அதாவது மறுசீரமைக்கப் படப்போகின்ற தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிக்கு இனித் தலைவர் மாவையின் மகன்தான். தான் தளபதியாக - செயலாளர் நாயகமாக - இருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியோடு பல்வேறு இயக்கங்களும் முட்டி, மோதி, முறுகலுக்கு வந்த போது அமிர்தலிங்கம் தனது மகனை வைத்துத் தனி இயக்கம் தொடங்கிய மாதிரி -
இப்போது யாழ்.பல்கலைக்கழக மாணவர் என்ற இளைஞர் தரப்பு தற்போது தேர்தலிலும், நினைவேந்தல் நிகழ்விலும் தமிழரசுக் கட்சிக்கு எதிராகக் கெம்ப, அதை எதிர்கொள்வதற்கு மகன் தலைமையில் இளைஞர் அணிக்கு கொம்பு சீவுகின்றார் மாவை அண்ணன்.

ஆனால், கேட்டால் தமக்கு ஏதும் தெரியாது என்பார். "முதலமைச்சர் பதவிக்கு களமிறங்குவேன்; ஆனால் எனக்குப் பதவி ஆசை கிடையாது' - என்று மாவை அண்ணன் கூறியபோது, அது 'Too much' என்று கொமண்ட் கொடுத்திருந்தேன்.

நேற்றுமுன்தினம் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் கிளைக் கூட்டத்திலும் அப்படி ஒரு விடயத்தைச் சொன்னார் அவர். மாவை சேனாதிராசா வலி. வடக்கில் தனது மகனை பிரதேசசபை வேட்பாளராக இறக்குவதற்கு தயராகின்றார் என்ற செய்தி ஊடகங்களுக்கு நேரத்துடனேயே கசிந்திருந்த போதிலும் பல வாரங்களின் பின்னர் வேட்புமனுவில் அவர் பெயர் இடம் பெற்ற போதுதான் அதை ஊடகங்கள் வெளிப்படுத்தின.

அதுவரை ஊடகங்கள் மரியாதை பேணி, அமைதி காத்தமையைப் பிழையாகப் புரிந்து கொண்டு விட்டார் போலும் அண்ணன் மாவை. அதனால்தான் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் அத்தனை தமிழரசுத் தூண்களுக்கும் முன்னால் ""நீங்கள் நம்புவீர் களோ தெரியாது. நம்பினால் நம்புங்கள். எனது மகன் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார், போட்டியிடுவார் என்பது வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் எனக்குத் தெரியும்.'' - என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் புதைத் திருக்கின்றார் அவர்.இப்படிக் கூறுவது கூட 'Too much' அன்றி வேறு யாது?

கொஞ்சக் காலம் போக, தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிக்கு எனது மகன் இணைப்பாளராக - ஏற்பாட்டாளராக வந்தபின் அதன் தலைவரான மையும் நான் எம்.பிப் பதவியைத் துறந்து மாகாண முதலமைச்சர் பதவியை நாடிப்போக, வலிகாமம் வடக்கு பிரதேசத்தை தமிழரசுக் கட்சி சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிப் பதவிக்கு மகன் வருவதும் கூட -

அவை நடப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் தனக்குத் தெரியும் என்று அண்ணன் மாவை கூறாவிட்டால் சரி தான். சரித்திரத்தை, ஊடக நறுக்குகள் வாயிலாகச் சேகரித்துக் கொள்பவர்கள் இன்று இந்தத் தகவலையும் ஊடக நறுக்காகச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

"இனி இது இரகசியம் அல்ல' என்ற இந்த விடயம், அரங் கேறும் போது இந்த செய்தி நறுக்கு உங்களுக்கு உதவக்கூடும்.