Breaking News

அடுத்த முதலமைச்சர் விக்கியே! செல்வம் ஊடாக தூதுவிட்ட சம்பந்தன்!

வடமாகாணசபையின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில் கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியும் பதில்களுமாக தமிழரசுக்கட்சிக்குள் பரவலாக இடம்பெற்றபோதும் மாவை தானே போட்டியிட உள்ளதாக கருத்து தெரிவித்து வந்திருந்த நிலையில் சம்பந்தன் வழமை போலவே தனது மாஸ்ரர் பிளாளை போட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ரொலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சம்பந்தருக்காக தூதுசென்று விக்கினேஸ்வரனுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அதற்கு விக்கினேஸ்வரன் சாதகமான பதில் எதனையும் தெரிவிக்கவில்லை என்றும் தமிழ்கிங்டொத்திற்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அடுத்தவாரம் விக்கினேஸ்வரனின் நூல் வெளியீட்டிற்காக யாழ்ப்பாணம் வரும் சம்பந்தன் விக்கினேஸ்வரனுடன் நேரில் கலந்துரையாடவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இதற்கு சுமந்திரனோ அல்லது தமிழரசு கட்சி தலைவர் மாவையோ உடன்படுவார்களா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செல்வம் அடைக்கலநாதனை அனுப்பிய சம்பந்தன் அதனோடு நிறுத்தாமல் இந்திய மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஊடாகவும் விக்கினேஸ்வரனை இத்திட்டத்திற்கு சம்மதிக்க வைத்து கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகளையும் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவான வாக்குகளையும் கூட்டமைப்புக்குள்ளேயே வைத்திருக்கும் சாணக்கிய திட்டமே இதுவென்பதையும் அறியக்கூடியதாக உள்ளது.



வடமாகாணசபை பொறுப்பெடுத்தபின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நிர்வாக ரீதியாக வினைத்திறனுடன் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றபோதும் அவர் தமிழர்களுக்கு சார்பாக உறுதியான நிலைப்பாடுகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றியதிலிருந்து அவருக்கான ஆதரவு தளம் ஏனைய அரசியல்வாதிகளுடன் ஒப்பிடுகையில் தாயகத்திலும் புலத்திலும் மிகவும் பலமான ஒரு நிலையில் உள்ளமை சம்பந்தனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதனால் விக்கினேஸ்வரனை வெளியே அனுப்பினால் அது கூட்டமைப்புக்கான இறுதி அத்தியாயமாக இருக்கும் எனவும் சம்பந்தனுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

விக்கினேஸ்வரன் கூட்டமைப்புக்கு எதிரான அணிக்கு தலைமை தாங்கி முதலமைச்சு வேட்பாளராக களமிறங்கினால் அது கூட்டமைப்புக்கு படுதோல்வியாக அமைந்துவிடும் என்பதோடு நல்லாட்சி என சொல்லப்பட்ட இப்போதைய ஆட்சியில் தீர்வுகாணலாம் எனச்சொல்லி கொண்டுவரப்போகும் அரைகுறைதீர்வைக்கூட கொண்டுவரமுடியாமல் போய்விடும் என்ற அச்சமும் சம்பந்தனிடம் இருப்பதாக சொல்லப்படுகிறது.