Breaking News

சூப்பர் ஓவரின் கடைசி பந்து வரை சென்ற விறுவிறுப்பான RCB - MI போட்டியில் நடந்தது என்ன?

ஐபிஎல் தொடரில் பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி,பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 

இஷான் கிஷன் அடித்த 99 ரன்கள், கெய்ரன் பொல்லார்டு குறைவான பந்துகளில் அரை சதம் விளாசியது, போன்றவை காரணமாக கடைசி 8.3 ஓவர்களில் 118 ரன்கள் குவித்தது மும்பை அணி. 

இறுதியில் இரு அணிகளும் 201 ரன்கள் குவித்ததால் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் ஜஸ்பரீத் பும்ரா சொதப்பியதால் 8 ரன்கள் இலக்கை பெங்களூரு அணி அடைந்து த்ரில் வெற்றிபெற்றது. 

201 ரன்கள் விளாசிய பெங்களூரு அணி சுலபமாக வெற்றிபெற்று விடும் என்று கருதிய நிலையில், இஷான் கிஷன், பொல்லார்டு பார்ட்னர்ஷிப் அமைத்து பந்துகளை சிக்ஸர், பவுண்டரிகளுக்கு விரட்டி நெருக்கடி கொடுத்தனர். மும்பை அணி வெற்றிபெற 4 ஓவர்களுக்கு 80 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்ட போது, இருவரின் துணையோடு 79 ரன்கள் எடுத்தது மும்பை அணி. 

கெய்ரன் பொல்லார்டு முதல் 10 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். கடைசி 14 பந்துகளில் 49 ரன்கள் குவித்து, பெங்களூரு அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தினார். குறிப்பாக, ஆடம் ஜம்பா வீசிய 17ஆவது ஓவரில் 4,6,6,2,6,3 எனப் பிரித்து மேய்ந்தார். நிலைமை கைவிட்டுப் போகும் நிலை ஏற்பட்டதால், அதிரடி சுழல் மன்னன் சஹல் 18ஆவது ஓவரை வீச வந்தார். 

இவர் ரன்களை கட்டுப்படுத்துவார் என்று எண்ணிய நிலையில், 22 ரன்கள் விட்டுக்கொடுத்து மும்பை அணிக்கு உதவினார். 17,18 ஓவர்களில் மட்டும் மும்பை அணி 49 ரன்கள் சேர்ந்தது. போட்டி சூப்பர் ஓவர் சென்றதற்கு இந்த ஓவர்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.  

கடைசி ஓவருக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இஷான் கிஷன், பொல்லார்டு களத்தில் இருந்தனர். நவ்தீப் சைனி பந்து வீசினார். முதல் இரண்டு பந்துகளைச் சிறப்பாக வீசி 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அடுத்த இரண்டு பந்துகளை கிஷன் சிக்ஸருக்கு தூக்கி அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 2 பந்துகளுக்கு 5 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், கிஷன் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி ஒரு பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பொல்லார்டு பவுண்டரி விளாசினார். 

இதனால், ஸ்கோர் 201 ஆனது. இரு அணிகளும் சமமான ஸ்கோர் அடித்ததால் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. 

நவ்தீப் சைனி வீசிய ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அடுத்துக் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பும்ரா பந்து வீசினார். விராட் கோலி, டி விலியர்ஸ் நிதானமாக ஆடி ரன்களை சேர்ந்து கடைசி பந்தில் வெற்றி இலக்கை அடித்து த்ரில் வெற்றி பெற்றனர்