Breaking News

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம்!

 


பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஏப்ரல் 29ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தருமாறு அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள், 2020 பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தற்போது சுயேச்சைக் குழுக்களாக செயற்படுபவர்களுக்கு ஜனாதிபதி இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்குமாறு வணக்கத்திற்குரிய மகாநாயக்க தேரர்கள் மற்றும் ஏனைய மதத் தலைவர்கள் உட்பட பல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்த பின்னரே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன்படி தற்போதைய பிரதமர் மற்றும் அமைச்சரவை இராஜினாமா செய்ததன் பின்னர் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வகட்சி அரசாங்கத்தின் கட்டமைப்பு, எடுக்கப்பட வேண்டிய காலம் மற்றும் பொறுப்புக்கள் வழங்கப்பட வேண்டியவர்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டுள்ளது.