Breaking News

காலி முகத்திடல் சம்பவம் - சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கை!

 


காலி முகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வன்முறை பிரயோகங்களை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தனது முகநூல் கணக்கில் வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தின் நுவன் போபகே உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போராட்டகாரர்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பதுடன், அவர்கள் இருக்கும் இடம் தெரியப்படுத்த வேண்டும். பொலிஸ் மா அதிபரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அத்துடன், இராணுவத் தளபதிக்கும் செய்தி அனுப்பியுள்ளேன்.

எவ்வாறாயினும், சம்பவங்கள் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.