Breaking News

கடல் அன்னையின் பெரும் சீற்றம் நிகழ்ந்து இன்றுடன் 18 வருடங்கள்!

ஆசிய பிராந்திய கடலோர மக்களுக்கு 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ‘சுனாமி' யாக வந்த இயற்கை அனர்த்தம் அழிக்கமுடியாத ஒன்றாகி விட்டது.

கடந்த 2004 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி நத்தார் பண்டிகையை கொண்டாடிய சந்தோசத்தில் திளைத்திருந்த மக்களை, துயரத்தின் எல்லைக்கு கொண்டுசெல்லும் நிலையில் அந்த கோர சம்பவம் நடந்தேறியது.

இந்து சமுத்திரத்தின் அருகில் உள்ள இந்தோனேசியாவின் தீவுக் கூட்டங்களில் ஒன்றான சுமாத்திரா தீவின் வடக்கே கடலுக்கு அடியில் காலை 6.58 மணிக்கு 9.0 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கமானது சுனாமியைத் தோற்றுவித்தது.

இன்றுடன் 18 வருட பூர்த்தி ; அழிக்க முடியாத ஆழிபேரலையின் நினைவுகளுடன் பலர்

சுனாமி பேரலைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, அந்தமான் தீவுகள் என 14 நாடுகளைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்து 676 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள், உயிரினங்கள் என கண்ணிமைக்கும் நொடியில் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

இதில் இந்தோனேசியாவில் ஒரு இலட்சத்து 84 ஆயிரம் உயிர்களும் இலங்கையில் 35 ஆயிரத்து 322 பேரும் பலியானதாக அன்றைய ஆரம்ப அறிக்கை கூறியது.

சுனாமியின் தாக்கத்தால் அதிகளவான அழிவுகளை எதிர்கொண்ட இரண்டாவது நாடு இலங்கை. இங்கு சுமார் 35,322 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடு, சுமார் 516,150 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர்.

அத்துடன் சுமார் 119,562 கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்தன. வடக்கு-கிழக்கு உள்ளிட்ட கடற்கரையோரப் பிரதேசங்களே அதிகளவான அழிவுகளை சந்தித்தன.

இலங்கையின் கிழக்கு கல்முனைப் பகுதியை முதலில் தாக்கிய சுனாமி அலையினால் பெரியநீலாவணையிலிருந்து பொத்துவில் வரையுள்ள நீண்ட கடற்கரைப் பகுதிகளே பெருமளவு பாதிப்பை கண்டுள்ளன. திருக்கோவில் தம்பட்டை மற்றும் அக்பர் கிராமம் முழுமையாக அழிந்துள்ளன.

2004இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் இலங்கையின் பாரிய மனித உயிர்சேதம் அம்பாறை மாவட்டத்திலேயே இடம்பெற்றிருக்கின்றது.

இங்கு சுமார் 9 ஆயிரத்திற்கும் அதிக மக்களை கடல் காவுகொண்டுள்ளது.

இதற்கு அடுத்ததாக சுமார் 4500 பேர் ஹம்பாந்தோட்டையிலும். சுமார் 3774 பேர் காலியிலும், மட்டக்களப்பில் 2975 பேரும், முல்லைத்தீவில் 2902 பேரும் பலியானதாக ஆரம்ப அறிக்கை கூறியபோதிலும் பின்னர் இவை மாற்றம் ஏற்பட்டது.

அதேசமயம் கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை சென்ற புகையிரதம், அதாவது மிகுந்த சனநெரிசல் மிக்க பயணிகள் புகையிரதம் கடலலையின் சீரற்றத்திற்கு இரையானது.

இதில் மிக மகிழ்வுடன் வீடு நோக்கிப் பயணித்தவர்களில் 1700 இற்கும் மேற்பட்ட மக்கள் மாண்டு போனார்கள். இது ஆசியாவின் புகையிரத விபத்துக்களில் முக்கியமானதாகவும் உள்ளது.