போர்க் குற்றத்தையும் உள்ளடக்கிய புதிய சட்டம் உருவாக்கப்படலாம் : சுமந்திரன்
அமெரிக்க தீர்மானத்திற்கு அமைய இலங்கையில் உருவாக்கப்படும் நீதிமன்ற பொறிமுறையானது குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவ தற்காகவே அன்றி அவர்களை மன்னித்து விடுவதற்காக அல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் என்பன இலங்கை சட்டத்திற்கு அமைய குற்றங்களாக கருதப்படாத போதிலும், அதனையும் குற்றங்களாக ஏற்கும் சட்டங்கள் இயற்பப்படவேண்டும் எனவும், இவ்வாறன ஒரு பரிந்துரை குறித்த பிரேரணையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் புதிய சட்டங்கள் உருவாகிய பல சந்தர்ப்பங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பன குற்றங்களாக உள்ளடக்கப்பட்ட சட்டம் உருவாக்கப்படலாம் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.