மகிந்தவிடம் இன்று விசாரணை
ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக்காக சுயாதீன தொலைக்காட்சியில் விளம்பரங்களை ஒளிபரப்பிய கட்டணத்தைச் செலுத்த தவறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்று நிதிமோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக் குழுவினால் விசாரிக்கப்படவுள்ளார்.
சுயாதீனத் தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்கான விளம்பரங்களை ஒளிபரப்பியதன் மூலம், 200 மில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதி மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த செப்ரெபம்பர் 23ஆம் நாள் மகிந்த ராஜபக்சவிடம், அவரது மீரிஹான இல்லத்துக்குச் சென்று விசாரணை நடத்தியது.
இந்தநிலையில், அவரிடம் இன்று இரண்டாவது தடவை, பகிரங்க விசாரணையாக நடத்தப்படவுள்ளது.இதற்காக இன்று காலை அவர் ஆணைக்குழு முன்பாக முன்னிலையாவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் அதிகாரிகளுக்கும் இன்று விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, இன்று விசாரணைக்கு வரும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கைது செய்யப்படக் கூடும் என்று பரவலாக வதந்திகள் பரவியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.