Breaking News

நல்லாட்சியிலும் வீழ்ச்சி காணும் வடக்கு மீன்பிடித்துறை

நல்லாட்சி அரசின் காலத்தில் வடக்கு மீன்பிடித்துறை வளர்ச்சியடையும் என எதிர்பார்த்த போதிலும் அது மேலும் கீழ் நிலை நோக்கியே சென்றுள்ளதாக பேராசிரியர் சூசை ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் ஆட்சியை பிடித்துள்ள புதிய அரசு மீன்பிடியில் இருந்த சில கட்டுப்பாடுகளை தளர்த்திய போதிலும் மீன்பிடித்துறை வளர்ச்சி பெறாமலேயே தற்போதும் உள்ளது.

எங்களிடமுள்ள துறைமுகங்கள், குறிப்பாக மயிலிட்டி போன்ற மீன்பிடிக்கு வரலாற்று பிரசித்திபெற்ற துறைமுகங்களும், காங்கேசன்துறை போன்ற துறைமுகங்களும் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளன. மீன்பிடித்துறை தொடர்பில் எமது மீனவர்களுக்கு போதிய பயிற்சிகள் ஆராய்சிகள் வழங்கப்படாமையாலும் மீன்பிடித்துறை வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது.

மன்னாரில் கிழமையில் வாரத்தில் மூன்று நாட்கள் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். வாரத்தில் மூன்று நாட்கள் மன்னார் வளைகுடா தென்னிலங்கை மீனவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்கள் நீளமான தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதால் எமது மீன் வளம் அடியோடு வாரி அள்ளப்பட்டு செல்லப்படுகின்றது.

இவ்வாறு எமது மீன்பிடித்துறை எமது நாட்டு அரசினால் நலிவுக்குள்ளாக்கப்பட்ட நிலையில், இந்திய மீனவர்களின் அத்துமீறல் என்பது எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு முடக்கும் செயலாக அமைந்துள்ளது. இதனை இந்திய இலங்கை அரசுகள் கட்டுப்படுத்தாது தமது அரசியல் நோக்கங்களுக்காக் வாய் மூடி மௌனம் சாதித்து வருகின்றன. இவற்றை எதிர்த்து போராடுவதே எமக்கு ஒரே வழி எனவும் அவர் குறிப்பிட்டார்.