Breaking News

வட இலங்கையில் பெரும் அழிவுகள்: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி


இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம்
வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பல கிராமங்களில் பொதுமக்களின் வீடுகள், ஆலயங்கள், பாடசாலைகள், பொதுக் கட்டிடங்கள் என்பன எதுவுமே இல்லாமல் வெட்டவெளியாக இருப்பதாக அங்கு சென்று திரும்பியவர்கள் கூறுகிறார்கள்.

மயிலிட்டி வீரமாணிக்கந்தேவன்துறையில் அமைந்துள்ள முருகன் ஆலயம் மற்றும் கண்ணகை அம்மன் ஆலயங்களில் அந்தப் பகுதி மக்கள் வழிபாடு செய்வதற்காக இராணுவம் அனுமதி வழங்கியிருந்தது.

இதனையடுத்து, மயிலிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களை இராணுவத்தினர் அங்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

'ஆலயங்கள்,பாடவாலைகளை காணவில்லை'

இவ்வாறு மயிலிட்டி பகுதிக்குச் சென்று திரும்பியுள்ள வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற, புனர்வாழ்வு சங்கத் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் அந்தப் பகுதிகளில் முன்னர் இருந்த பல ஆலயங்களையும், பாடசாலைகளையும் காணவில்லை என கூறுகின்றார்.

அங்கு மயிலிட்டி எது பலாலி எது என்று அடையாளம் காண முடியாத வகையில் அந்தப் பிரதேசம் முழுவதுமே சிதைந்து உருமாறிப் போயிருப்பதாக அவர் பிபிசி தமிழோசையிடம் விபரித்தார்.

அந்தப் பிரதேசம் தற்போது இருக்கின்ற நிலையில் அங்கு மீள்குடியேற்றம் சாத்தியமாகுமா என சந்தேகம் எழுப்பியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், எப்படியாவது தமது சொந்தக் காணிகளை மீட்டு.

அங்கு மீள்குடியேற வேண்டும் என்ற மன உறுதி அங்கு சென்று திரும்பிய மக்கள் மனங்களில் தோன்றியிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.