முதலமைச்சரும் முரண்பாடும் -அரசியல் தீப்பொறி - THAMILKINGDOM முதலமைச்சரும் முரண்பாடும் -அரசியல் தீப்பொறி - THAMILKINGDOM
 • Latest News

  முதலமைச்சரும் முரண்பாடும் -அரசியல் தீப்பொறி


  தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு ஒற்றுமையாக
  இருக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அடிக்கடி மக்களுக்கு இதுபற்றி அவர்கள் உபதேசம் செய்கின்றார்கள். ஆனால், அரசியல் தலைவர்கள் ஒற்றுமையாக ஓரணியில் திரண்டு தங்களுக்கு சிறப்பான, வலுவான தலைமையைத் தர வேண்டும் என்பது மக்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
  இந்த நாட்டின் சாபக்கேடாகப்பரிணமித்துள்ள இனப்பிரச்சினை தீவிரம் பெறுவதற்கு முன்னரும், பிரச்சினை மோசமடைந்த நிலையிலும் தமிழ் அரசியல் தலைவர்கள் கட்சி ரீதியாகப் பிரிந்திருந்தார்கள்.இப்போது நிலைமைகள் மிகவும் மோசமடைந்திருக்கின்றன. நாளுக்கு நாள் பிரச்சினைகள்கிளைவிட்டு அதிகரித்துச் செல்கின்றனவே தவிர, அவைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான வாய்ப்புக்களைக் காண முடியவில்லை. பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டிய இருதரப்பினரும் இணக்க நிலை பேச்சுவார்த்தை என்ற புள்ளியில் இருந்து எதிர்த் திசைகளில் வேகமாகப் பயணம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
  இத்தகையதோர் அரசியல் சூழலில், தமிழ் அரசியல் தலைமைகள் அசைக்க முடியாத அளவுக்குப் பலமுள்ளதாக ஒன்றிணைந்திருக்க வேண்டும். அவ்வாறு பலமுள்ள ஒரு நிலையில் இருந்தால்தான் அரசாங்கத்தை ஓர் அரசியல் தீர்வை நோக்கி நகர்த்திச் செல்ல முடியும். அல்லது அரசியல் தீர்வை நோக்கி வரச் செய்வதற்கான அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியும்.
  இந்த சாதாரண உண்மையை, இன்றைய காலத்தின் தேவையை தமிழ் அரசியல் தலைவர்கள் உணராமல்இல்லை. ஆனால் செயலில் அவர்கள் அதனைக் காட்டாமல் இருப்பதே பிரச்சினையாக உள்ளது.
  தமிழ் அரசியல் தலைமையை ஆயுதபலத்தின் மூலம் தக்கவைத்திருந்த விடுதலைப்புலிகள், அரசியல் ரீதியாக ஏனையகட்சிகளின் தலைவர்களைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஒன்றிணைத்துவைத்திருந்தார்கள். விடுதலைப்புலிகளுடைய மறைவையடுத்து. தமிழ் அரசியல் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தனது கூட்டிணைவைப் பலப்படுத்துவதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. யுத்தம் முடிவுற்றதையடுத்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்ற பலவாறாகப் பேசிவந்திருக்கின்றார்களேயொழிய, அதனை நடைமுறைப்படுத்தவில்லை.
  ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் மக்களிடம் செல்லும்போதெல்லாம் நீங்கள் ஓரணியில் திரண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று அவர்களைத் தூண்டி வந்தார்கள். பின்னர் படிப்படியாகக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்ற போக்கில் மாற்றம் ஏற்பட்டு, தேர்தல் காலத்தில் மாத்திரம் கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்துகின்றார்களோ என்ற வகையில் செயற்பாடுகள் இடம்பெறத் தொடங்கியிருந்தன. இப்போது வெளிப்படையாகவே, இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் புறந்தள்ளி, தமிழரசுக் கட்சியை வளர்த்தெடுக்கின்ற கைங்கரியத்தில் ஈடுபட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
  முரண்பட்ட கருத்துக்கள்
  தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்ற தேவை நீண்ட காலமாகவே இருந்து வருகின்றது. ஆயினும் அதுவிடயத்தில் தீர்க்கமான ஒரு முடிவை எடுத்து, அதற்கமைவாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரியவில்லை. ஒருவரையொருவர் காரணம் காட்டுவதும், ஒருவர் மீது மற்றவர் குற்றம் சுமத்துவதுமாகக் காலம் கடத்தப்பட்டதையே மக்கள் இதுவரையில் நிதர்சனமாகக் கண்டிருக்கின்றார்கள்.
  வவுனியாவில் நடத்தப்பட்டஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள மாவை சேனாதிராஜா, லண்டனுக்குச் சென்றிருந்த போது வைபவம் ஒன்றில் உரையாற்றுகையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்வதென்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயம் என தெரிவித்திருந்த கருத்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும், அதனைப் பலப்படுத்த வேண்டும், என விரும்பியிருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
  ஆயினும், மாவை சேனாதிராஜா அவ்வாறு தெரிவித்திருக்கமாட்டார் என்ற வகையில் நழுவலான கருத்தையே தலைவர் சம்பந்தன் கூறியிருந்தார். கூட்டமைப்பை; பதிவு செய்வதா இல்லையா என்பது பற்றிய விவாதங்கள், வாக்குவாதங்கள் எல்லாம் நடைபெற்று, அதனைப் பதிவு செய்வதென்ற முடிவைக் கூட்டமைப்பினர் ஏற்கனவே எடுத்திருந்தார்கள். பதிவு விடயத்தைக் கையாள்வதற்காக மாவை சேனாதிராஜாவை உள்ளடக்கிய குழுவொன்றும் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தது.

  அது மட்டு மல்லாமல், கூட்டமைப்பிற்கான யாப்பு ஒன் றைத் தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான பொறுப்பும் குறிப்பிட்ட முக்கியஸ்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இத்தகைய ஒரு பின்னணியில்தான் தமிழரசுக் கட்சியின் தலைவராக வெளிநாடு சென்றிருந்த மாவை சேனாதிராஜா கூட்டமைப்பு பதிவு செய்யப்படமாட்டாது என்ற தகவலைத் தெரிவி த்திருந்தார்.
  வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிவிட்ட போதிலும், மாவை சேனாதிராஜா கூட்டமைப்புப் பதிவு செய்யப்படுமா இல்லையா என்பதுபற்றி இங்குள்ள மக்களுக்கு அவர் இன்னுமே கருத்து எதனையும் வெளியிடவில்லை.
  லண்டனில் அவர் தெரிவித்திருந்த கருத்து சரியானதுதானா என்பதை அவர் உறுதிப்படுத்தவுமில்லை. அல்லது அவ்வாறு தான் தெரிவிக்கவில்லை என்று மறுத்துரைக்கவுமில்லை. ஆனால் பதிவு விடயத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் விரைவில் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று மாத்திரம் அவர் தெரிவித்திருக்கின்றார். அவருடைய இந்தப் போக்கு, கூட்டமைப்பு பதிவு செய்யப்படமாட்டாது, அது தேர்தல் காலத்தில் மாத்திரம் மக்களை அணுகிச் செயற்பட்டு அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு தாரக மந்திரமாக மாத்திரமே பயன்படுத்தப்படும் என்ற முடிவுக்கே வரச் செய்திருக்கின்றது.
  கூட்டுக் கட்சிகளுடன் கூடிப்பேசப்படாத அறவழிப்போராட்டம்
  நாடு திரும்பிய அவர் யாழ்ப்பாணத்தில் நடத்திய தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டத்தில் கட்சியின் வவுனியா மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்தே ஆராயப்பட்டிருக்கின்றன. குறிப்பாக தமிழரசுக் கட்சி ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு உத்தேசித்துள்ள அறவழிப்போராட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கென போராட்ட குழுவொன்று அமைக்கப்படும் என்றும், அந்தக் குழு மக்களை அணிதிர ட்டி போராட்டங்களை முன்னெடுக்கும் என் றும், அதற்குத் தேவையான வழிகாட்டல்க ளும், அறிவுறுத்தல்களும் தலைவர்களினால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
  இந்த அறவழிப் போராட்டத்திற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவு பெறப்படும் என்றும், அத்துடன் மலையகத் தமிழ்க்கட்சிகள், முஸ்லிம், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடைய ஆதரவும் பெறப்படும் என்றும் மாநாட்டில் மாவை சேனாதிராஜா தெரிவித்திருக்கின்றார்.
  தமிழரசுக் கட்சியின் மாநாட்டிலும்சரி, யாழ்ப்பாணத்தில் இப்போது நடைபெற்ற அந்தக் கட்சியின் கூட்டத்திலும்சரி, தமிழரசுக் கட்சி முன்னெடுக்கவுள்ள அறவழிப்போராட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்கு என்ன, அதில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுடன் எவ்வாறு செயற்படுவது என்பது பற்றிய தகவல்கள் எதுவுமே வெளியிடப்படவில்லை. அதுபற்றி விவாதிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.
  தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகளுக்கு டிசம்பர் மாதத்திற்குள் முடிவுகட்டப்பட வேண்டும். இல்லையேல் ஜனவரி மாதம் முதல் பரவலாக அறவழிப்போரா ட்டம் வெடிக்கும் என்று தமிழரசுக் கட்சியின் வவுனியா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
  தமிழரசுக் கட்சியென்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கட்சியாகக் கருதப்படுகின்றது.
  அவ்வாறிருந்த போதிலும், தமிழ ரசுக் கட்சியினால் அறிவிக்கப்பட்டுள்ள அறவழிப் போராட்டம் குறித்து அதற்கான தீர்மா னம் எடுக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகின்ற போதிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப் பில் முன்கூட்டியே கலந்தாலோசிக்கப்பட்டதாகவோ, விவாதிக்கப்பட்டதாகவோ தெரியவி ல்லை.
  தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்படமாட்டாது என்ற தொனியிலான தமிழரசுக் கட்சியின் கருத்தும், அறவழிப்போராட்டத்தைத் தனித்து நடத்துவதற்கான அந்தக் கட்சியின் முடிவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை, தமிழரசுக் கட்சி புறக்கணித்துச் செயற்படப் போகின்றதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், அரசாங்கம் கடைப்பிடிக்கின்ற ஒரு போக்கையே தமிழரசுக் கட்சியும் பின்பற்றுகின்றதா என்ற சந்தேகமும் இப்போது எழுந்திருக்கின்றது.

  இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகத் தனியே தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் மாத்திரம் பேச்சுக்கள் நடத்தப்படமாட்டாது. அனைத்துக் கட்சிகளுடனும் சேர்த்துத்தான் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று அரசாங்கம் கூறி வருவதையே தமிழரசுக் கட்சியின் அறவழிப்போராட்டத்திற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும், மலையகத் தமிழ்க் கட்சிகள் முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு பெறப்படும் என்ற கூற்று நினைவுறுத்துவதாக அமைந்திருக்கின்றது.
  தமிழரசுக் கட்சி முன்னெடுக்கின்ற அறவழிப்போராட்டத்தில் முக்கியமான பங்கை வகிக்க வேண்டியது, அந்தக் கட்சியின் தலை மையில் இயங்குகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகும். ஆனால் அந்தக் கட்சிகளை, தொலைவில் இருக்கின்ற மலையகக் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் வகைக்குள் அடக்கி கருத்து வெளியிடுவது ஏன், எதற்காக என்ற கேள்விகளை இயல்பாகவே எழுப்பியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், தமிழரசுக் கட்சியின் இந்தப் போக்கு மறைமுகமான ஓர் இலக்கை நோக்கிச் செல்கின்றதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
  முதலமைச்சரின் கருத்துக்கள்
  மறுபுறத்தில் வடமாகாண முதலமைச்சர் வெளியிட்டுள்ள முரண்பாடான கருத்துக்களும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் மட்டுமல்லாமல், தமிழ் மக்கள் மத்தியிலும் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றன.
  மாகாண சபை உறுப்பினர் ஒருவரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நீங்கள் எந்தக் கட்சி என்று முதலமைச்சர் கேட்டதாகக் கூறப்படுகின்ற ஒரு சம்பவமும், அத்துடன் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களை ஆதரித்தும், ஏனையோரைப் புறக்கணித்தும் அவர் நடந்து கொள்வதாகக் கூறப்பட்டதைய டுத்து எழுந்துள்ள சர்ச்சைகள் முடிவுக்கு வந்தபாடாக இல்லை.

  மாறாக முதலமைச்சரின் போக்கில் சந்தேகத்தையும், ஏனைய கட்சியினரை தமிழரசுக் கட்சியின் புதிய போக்காகக் கருதப்படுகின்ற போக்கில் திட்டமிட்ட வகையில் முதலமைச்சரையும் தமிழரசுக் கட்சி இயக்கி வருகின்றதா என்ற ஐயப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
  ஆயுதமேந்திப் போராடிய கட்சிகளுடன் சேர முடியாது. அவர்களுடைய கொள்கைகளுடன் ஒத்துப் போக முடியாது என்று முதலமைச்சர் கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்தில் நேரடியாகவே தெரிவித்திருந்தார். தமிழரசுக் கட்சியுடன் இணைந்துள்ள அவரை, ஏனைய கட்சிகள் தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டதாகவும், அந்தக் கட்சிகளின் கொள்கைகளை ஏற்று அவ்வாறு இணைய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

  வன்முறைக் கட்சிகள் என அவர் குறிப்பிட்டிருந்த - அந்த கட்சிகள் குறிப்பாக ஆயுதமேந்திப் போராடி, பின்னர் ஜனநாயக வழிக்குத் திரும்பி கடந்த கால் நூற்றாண்டு காலமாகத் தமிழ் மக்கள் மத்தியில் அரசியலில் ஈடுபட்டு வருகின்றன. அந்தக் கட்சிகளை ஏற்றுக்கொண்டுள்ள தமிழ் மக்கள், தமது பிரதிநிதிகளாக, பாராளுமன்றத்திற்கும். உள்ளூராட்சி சபைகளுக்கும் அவர்களில் பலரை உறுப்பினர்களாகத் தெரிவு செய்திருக்கின்றார்கள்.
  வடமாகாண சபை தெரிவு செய்யப்படுவதற்கு முன்பே பல வருடங்களாக அவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் மட்டுமல்லாமல், இலங்கை அரசாங்க த்துடனான பேச்சுக்கள், இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுடனான முக்கிய சந்திப்பு க்கள், பேச்சுக்களில் அவர்கள் பங்குபற்றியி ருக்கின்றார்கள். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்கள் பல்வேறு விடயங்களில் தமிழரசுக்கட்சித் தலைவர்களுடன் இணைந்து முக்கிய முடிவுகளை எடுத்திருக்கின்றார்கள். அவர்கள் இன்றும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர்களாக இருக்கின்றார்கள்.
  இவ்வாறான ஒரு நிலையில் அவர்களுடைய கொள்கைகள் குறித்து முதலமைச்சர் பிரித்துக் காட்டி அந்தக் கொள்கைகளுடன் ஒத்துப்போக முடியாது என்று கூறியிருப்பது வேடிக்கையானதாக இருக்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற அரசியல் அமைப்புக்குள் இணைந்தே வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் வேட்பாளர்களாகப் போட்டியிட்டார்கள்.

  தேர்தல் களத்தில் அனைவரும் இணைந்தே பரப்புரை பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள். இத்தகைய ஒரு பின்னணியில் வன்முறை கட்சிகள் என்றும் ஆயுதமேந்திப் போராடிய கட்சிகளின் கொள்கைகள் வேறு தமிழரசுக் கட்சியின் கொள்கை வேறு என்று வேறுபடுத்தி கருத்துக்களை வெளியிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்து வெளிப்பாடாகவே நோக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
  நீதித்துறையில் பல வருடங்கள் சேவையாற்றிவிட்டு, பணியில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் தமிழ் மக்களுக்கு அரசியலில் சேவையாற்ற வேண்டும் என்ற விருப்பத்துடனேயே முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அரசியல் பிரவேசம் செய்திருக்கின்றார். அவரை தலைவர் சம்பந்தன் அரசியலுக்குள் இழுத்து வந்திருந்தாலும்கூட, அரசியல் பணியில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கம் இல்லா மல் அவர் அரசியலுக்கு வந்திருக்க முடியாது.
  ஆனால், முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அரசியலுக்கு வருவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே ஆயுதக்குழுக்களில் இணைந்தவர்கள் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காக அரசியலில் பிரவேசித்திருந்தார்கள். அவ்வாறு அவர்கள் அன்று அரசியலில் இறங்கியபோது அவர்களுக்கு உயிர் களை இழக்க வேண்டும். கொண்ட கொள்கைக்காக உயிர்களைத் தியாகம்செய்ய வேண்டும் என்ற ஒரேயொரு நோக்கம் மட்டுமே இருந்தது. இன்றைய அரசியலிலும் பார்க்க அவர்கள் உட்பிரவேசித்த அரசியல் வெளிப்படையாகவே கரடுமுரடானது,
  கடுமையானது என்பதைத்தெரிந்துகொண்டே அவர்கள் அதில் ஈடுபட்டார்கள். அவ்வாறு ஈடுபட்டிருந்த அவர்கள் உயிரோடு வீடு திரும்பமாட்டோம் என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தார்கள். அவ்வாறு அரசியலில் அன்று ஈடுபட்ட பலர் இன்று உயிரோடு இல்லை. தாங்கள் முன்னெடுத்திருந்த கொள்கைக்காக அவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்திருக்கின்றார்கள். அந்தத் தியாகம் அளப்பரியது. அது கேள்விக்கு அப்பாற்பட்டது.
  அந்தத் தியாகங்களின் ஊடாகத்தான் இப்போது அரசியல் தலைவர்களாக இருப்பவர்களுக்கான அரசியல் மேடையும் களமும் கிட்டியிருக்கின்றன. இதனை மறந்துவிடுவது நல்லதல்ல.
  எனவே, மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் ஈடுபட்டுள்ள ஆயுதமேந்திப் போராடிய கட்சியைச் சேர்ந்தவர்களும்சரி, பணி ஓய்வு பெற்றதன் பின்னர் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று அரசியலுக்கு வந்துள்ள முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் சரி, நல்லதொரு நோக்கத்திற்காகவே தங்களை ஈடுபடுத்திக் கொண்டி ருக்கின்றார்கள். அந்த நோக்கம் சந்தேகத்திற்குரியதல்ல. சந்தேகத்திற்கு உட்படுத்தக் கூடி யதுமல்ல. மக்கள் இரு தரப்பினரையும் தங்களின் தலைவர்களாக, தங்களுக்கு சேவையா ற்றுவார்கள் என்றே நம்பியிருக்கின்றார்கள். அந்த நம்பிக்கையிலேயே அவர்களின் பின்னால் அணி திரண்டிருக்கின்றார்கள்.
  இவ்வாறு முரண்பட்ட கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு என்ன நடக்கப்போகின்றது என்ற கேள்வி எழுந்திருந்தாலும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும் அதன் தலைவர்களையும் மலைபோல நம்பியிருக்கின்றார்கள்.

  அந்த நம்பிக்கையையும் அவர்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்திருப்பவர்களும் அந்த நம்பிக்கையைச் சிதறடிக்கத்தக்க வகையில் குறுகிய கட்சி அரசியல் என்ற வட்டத்திற்குள் கூனி குறுகிவிடக் கூடாது. அத்தகைய செயற்பாட்டின் மூலம் எதிர்கால சந்ததியினரின் பழிச்சொல்லுக்கு ஆளாகத்தக்க வகையில் காரியங்களை முன்னெடுக்கக் கூடாது.
  - செல்வரட்ணம் சிறிதரன்
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: முதலமைச்சரும் முரண்பாடும் -அரசியல் தீப்பொறி Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top