தூய்மையான வடக்கு மாகாணம்; உடன் ஆரம்பிக்க வேண்டிய திட்டம் - THAMILKINGDOM தூய்மையான வடக்கு மாகாணம்; உடன் ஆரம்பிக்க வேண்டிய திட்டம் - THAMILKINGDOM
 • Latest News

  தூய்மையான வடக்கு மாகாணம்; உடன் ஆரம்பிக்க வேண்டிய திட்டம்  ஞான பூமி எனப்போற்றப்படுவது இந்திய தேசம்.  இந்திய தேசத்தில் ஓடுகின்ற புனித கங்கைகளும் கோவில் கொண்ட மலைகளும் ஞானவான்களின் ஆச்சிரமங்களும் பாரததேசத்திற்கு பேரழகையும் பேரின்பத்தையும் வழங்கலாயின.

  எனினும் நூறு கோடியைக் கடந்த மக்கள் தொகையும் வறுமை நிலைமைகளும் இந்திய தேசத்தின் தூய்மைக்குப் பெரும் சவாலாயின. புனித தலங்களும் புனித தீர்த்தங்களும் கூட அசுத்தம் அடையும் அளவிலேயே இந்தியாவில் தூய்மை இருந்தது. இந்நிலையில் “தூய்மையான இந்தியா” என்ற கோசத்தோடு இந்திய தேசத்தை தூய்மையாக வைத்திருக்கும் ஏற்பாடுகளை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்துள்ளார்.

  இதுகாறும் ஆட்சியில் இருந்தவர்கள் கட்டாயமாகச் சிந்தித்துத் செயற்படுத்தி இருக்க  வேண்டிய இந்தியாவின்  தூய்மை என்ற விடயம் இதுவரை பேசப்படாத பொருளாக இருந்தமை விசித்திரமே. 

  எனினும் நரேந்திர மோடி அவர்கள் பிரதமராகப் பதவியேற்ற கையோடு இந்தியாவை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற சிந்தனையை வலியுறுத்தினார். அதற்காக தானே விளக்குமாறு எடுத்து நிலத்தைக் கூட்டி துப்புரவு செய்தார். 

  பிரதமர் மோடியின் இந்தத் திட்டத்திற்கு இந்திய தேசம் முழுவதிலும் பூரண ஆதரவு கிடைத்து வருகிறது. தூய்மையான இந்தியா என்ற மோடியின் கனவு மிக விரைவில் நனவாகும் என்பது நிறுதிட்டமான உண்மை. 

  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்துள்ள தூய்மையான இந்தியா என்ற திட்டம் பற்றி நாமும் சிந்திப்பது பொருத்துடையதாகும். எனினும் எங்கள் நாட்டில்  ஜனாதிபதி அல்லது பிரதமர் ஓர் இடத்திற்கு விஜயம் செய்கிறார் என்றவுடன் அவர் செல்லுகிற இடத்தை, செல்லும் பாதையை துப்புரவு செய்யும் வழமையே உள்ளது. 

  ஜனாதிபதியின் வருகைக்காக வீதிகள் புனரமைக்கப்படுவதும் கட்டிடங்களுக்குவர்ணம் பூசுவதுமே வழமையாக உள்ளது. இத்தகைய ஏற்பாடுகள் இப்படித்தான் எல்லா இடங்களும் என்பது போன்ற மாயத் தோற்றத்தை நாட்டின் தலைவருக்கு காட்டுவதாக அமையும். 

  உண்மையில் ஒரு நாட்டின் தலைவர் தனது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தின் சமகால நிலைமைகளை அறிய வேண்டும். அப்போதுதான் வீதிகளின் நிலைமை, எப்படி மக்கள் வாழும் வீடுகளின் தரங்கள்  எத்தன்மை யானவை என்பது புரியும். இதை விடுத்து ஆட்சித் தலைவரின் வருகைக்காக திருத்தப்பணிகளும் துப்புரவுப் பணிகளும் நடக்குமாயின் ஆட்சித் தலைவர் ஒவ்வொரு இடத்திற்கும் விஜயம் செய்ய வேண்டும். அதிலும் அடிக்கடி விஜயம் செய்ய வேண்டும். அப்போதுதான் தூய்மை, புனரமைப்பு என்பது எங்கள் நாட்டில் சாத்தியமாகும் என்றாகிவிடும். 

  ஆனால் இந்திய தேசத்தைப் பார்த்தால் பிரதமர் மோடி மிகவும் துப்புரவு குறைந்த இடத்தைக் கூட்டி துப்புரவு செய்வதைப் பார்க்க முடியும். அதிலும் எந்தவித பந்தா படையணிகள் இல்லாமல் தனித்து நின்று தானே கூட்டித் துப்புரவு செய்து சுத்தமான இந்தியா என்ற திட்டத்தை ஆரம்பித்து வைப்பதைக் காணலாம். 

  ஆக, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள ஆட்சி வேறுபாடுகள் இதில் இருந்து புரியக் கூடியவையே. எதுவாயினும் பிரதமர் மோடி முன்னெடுத்துள்ள தூய்மையான இந்தியா என்ற திட்டத்தை வடக்கு மாகாண அரசும் நடைமுறைப்படுத்த வேண்டும். போரினால் பல்வேறு அனர்த்தங்களைச் சந்தித்த வடக்கு மாகாணம் தூய்மைப்படுத்தப்படுவது மிகமிக அவசியமாகும்.

  மாதத்துக்கு ஒரு தடவை- வாரத்திற்கு ஒரு தடவை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதையும் டெங்கு ஒழிப்பு வாரம் மேற்கொண்டதற்கு அறிக்கையும் புகைப்படமும் கேட்பதையும் விடுத்து “தூய்மையான வடக்கு மாகாணம்” என்ற திட்டத்தை நடை முறைப்படுத்தி அனைத்து மாகாணங்களுக்கும் முன் மாதிரியாக நம்மாகாணம் விளங்க வேண்டும். 

  டெங்கு ஒழிப்பது என்பதை விடுத்து தூய்மையான வடக்கு மாகாணம் என்ற திட்டத்தை அமுல்படுத்தும் போது டெங்குடன் ஏனைய தொற்று நோய்களும் தடுக்கப்படும். எனவே வடக்கு மாகாண அரசு தூய்மையான வடக்கு மாகாணம் என்ற இலக்கினை நோக்கிச் செல்வதற்கு ஏற்ற ஏற்பாடுகளை செய்வது காலத்தின் கட்டாய தேவையாகும். 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தூய்மையான வடக்கு மாகாணம்; உடன் ஆரம்பிக்க வேண்டிய திட்டம் Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top